தமிழா நீ பேசுவது தமிழா - புதுவைக் குமார்
ஆங்கிலேயன் வெளியேறிவிட்டான்
நம் நாட்டிலிருந்தது
ஆங்கிலம்தான் வெளியேறவில்லை
நம் நாவிலிருந்து
உலகின் எல்லா மூலையிலும்
தமிழ் உள்ளது
தமிழனின் மூளையில் மட்டும் தமிழ் இல்லை
தமிங்கிலம் எனும் திமிங்கலம்
கவிழ்க்க எண்ணுகிறது
பாற்கடலில் மிதக்காது
நூற்கடலில் மிதக்கும் தமிழ்ப்
போர்க்கப்பலை
ஆங்கிலத்தில் பேசினால்
அபாரம் என்கின்றனர்
தமிழில் பேசினால்
அபராதம் என்கின்றனர் பள்ளியில்
வட மொழி பேசும் வாய்க்கு வடை
நடைமொழி பேசும் வாய்க்குத் தடை
தமிழோடு ஆங்கிலம் ஆகியது
கலப்படம்
அது நல்லப் படத்தில் கலந்த நீலப்படம்
நிலவில் கரையாய் ஆங்கிலம் தமிழில்
ஆற்றங் கரையில் மணலாய்
தமிழோ அழிவில்
தமிழில் பேசுவது வெறுமை
ஆங்கிலம் பேசுவது பெருமை
தமிழனுக்கு
ஆங்கிலத்தை அகற்றுவோம் தமிழைப் போற்றுவோம்