ர ரா - ஒரு சிறு தொடக்கம்

காற்றை கிழித்து கொண்டு வான் எங்கிலும் பறவைகள் தம் கூட்டினை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே கதிரவனை மறைக்க போட்டி போட்டு கொண்டு உலவி கொண்டிருந்தன கரு மேகங்கள். மெல்லியதாய் வந்த பூங்காற்று அது சுமந்து வந்த புழுதியை என் மீது பெரிய மனதுடன் கொட்டி விட்டு சென்றது. சற்றே தூரமாக கண்கள் விரிந்தன. விரிந்த கண்கள் முழுவதும் சிவந்த சிவப்பு நிறம் பளிச்சிட்டது. பாவம்! அந்த வானமகள் யாரிடம் அறைவாங்கி இப்படி கன்னம் சிவந்தாளோ. தெரிந்து கொள்ள ஆர்வம் ஏதும் இன்றி மெல்லியதாய் நடை போட ஆரம்பித்தேன்.மனம் முழுவதும் ஏதோ குழப்பம் தொற்றி கொண்டு இருந்தது. "ரகு டேய் ரகு" என ஒரு குரல் கேட்டது. என் பெயர் ஒலித்த திசை நோக்கி திரும்பினேன் நினைத்தது போலவே அவளே தான். அவள் கண்களை பார்த்து பேச மனம் இல்லாமல் நடை போட்டு கொண்டிருந்த நான் பேருந்து நிலையம் நோக்கி சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். என் நடைக்கு ஈடு கொடுக்க அவள் சற்றே ஓடி வரவேண்டியதாகிற்று. அவள் இவ்வாறு ஓடி வருகிறாள் என்று நான் கண்களால் பார்க்கும் முன்பே அவள் கொலுசொலி என் காதுகளை வந்தடைந்தது. மேலும் அதனை தொடர மனம் இல்லாமல் நான் சட்டென நின்றேன். அவள் என்னை வந்து அடையும் அந்த சிறு இடைவெளியில் அவள் என் வாழ்வில் வந்த அந்த பொழுதுகளை தேடி என் மனம் சென்றது.பூங்காவனமாய் இருந்த என் மனம் எனும் தோட்டத்தில் பட்டம் பூச்சியாய் அவள் வந்து சேர்ந்தாள். இல்லை இல்லை வாசம் சேர்த்தாள். சொல்லி கொள்ளும் அளவு அவள் உயரம் இல்லை. ஆனால் அவளை போல பாசம் காட்டிட உலகில் எவரும் இல்லை. அவள் சூடி கொண்ட பூக்கள் மட்டும் தான் அந்த மந்திர வாசனை வீசும். என் மீது அவள் அப்படி ஒரு பாசம் வைக்க எந்த காரணமும் எனக்கு என் அறிவுக்கு எட்டவில்லை. கண்கள் பார்த்து கொண்ட அந்த நொடி எங்களுக்குள் ஏற்பட்டது அந்த அன்பு. குறும்பாக சென்ற அந்த பயணம் பின்பு போய் சேர்ந்த இடம் தான் காதல். ஆம். உலகில் அதற்கு பெயர் காதல் என்றார்கள். அவள் மீது நான் மையல் கொண்ட காரணமும் தெரியவில்லை, அவள் பாதம் தொட்ட என் விரல்கள் என்ன புண்ணியம் செய்தததோ தெரியவில்லை. என் பெயர் சொல்லி அவள் அடைந்த மகிழ்ச்சிக்கோ எல்லை இல்லை. இப்படி காரணம் ஏதும் தெரியாமல் இருப்பதால் தான் என்னவோ அது எப்போதும் நினைவில் இருக்கின்றது. நினைவு என்றவுடன் நினைவுக்கு வருகிறது அவள் என் அருகில் வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள் . என் உதடுகள் அவள் பெயரை உச்சரிக்க தயார் ஆனது. அதற்குள் "என்னடா நீ! இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டு போவியா" என சுற்றும் முற்றும் பார்த்து "பளார்" என என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். இப்போது அந்த வானமகள் என்னை பார்த்து கேலியாய் புன்னகை பூத்து தன் சிரிப்பினை இடியின் மூலம் தெரியப்படுத்தினாள். நான் பேசுறது காதுல விழுகுதா இல்லையா இப்படி பேசாம நிக்குற என்றாள். என்னை மன்னிச்சுரு என்று முதல் வார்த்தை உதிர்த்தேன். அவள் தொடர்ந்தாள்: "ரகு நம்ம காதலிக்க ஆரம்பிச்சு இது தான் எனக்கு முதல் பர்த்டே . இதுவரைக்கும் ஒரு நாள் கூட நீ கோபப்பட்டு பாக்கல நான். அதான் என் பர்த்டே கிப்ட்டா உன்னோட கோபத்தை வாங்கிக்கலாம்னு உன்னை என் பிரண்ட்ஸ் முன்னாடி அப்படி பேசிட்டேன் டா. என்கிட்டே நீ காட்டுன உன்னோட அந்த முதல் கோபம் நான் சாகுற வரை என் என் நெஞ்சுல இருக்கும் டா. இப்படி ஒரு கிப்ட் யாரும் குடுத்துருக்கவும் முடியாது வாங்கிற்கவும் முடியாது. ஐ லவ் யு டா". அவள் கண்களை பார்த்து சிரித்து கொண்டே என் உதடுகள் சொன்னது: "ராகா ஹாப்பி பர்த்டே டு யு".

எழுதியவர் : அமர்நாத் (28-Sep-18, 7:52 pm)
சேர்த்தது : அமர்நாத்
பார்வை : 223

மேலே