உறங்காத கண்கள்
===================
முகைநடுவில் தேனுறங்க முகில்மடியில் வானுறங்க
=முள்நுனியில் பனியுறங்க முழுநிலவில் இருளுறங்க
வகைவகையாய் மலருறங்க வலைமறந்து மீனுறங்க
=வனத்திடையே வசித்திருக்கும் வனப்புமிகு விலங்குறங்க
புகைவடிவில் முகிலுறங்க புனலழகில் கரையுறங்க
=புலர்பொழுதை காண்பதற்குள் படர்ந்தவிருள் தானுறங்க
பகைவர்தம் உறைக்குள்ளே பாசமுடன் வாளுறங்க
=பதவியாசைக் கொண்டவர்கள் பாழ்மனது உறங்கலையே!
**
பாத்திரத்தில் பிச்சையின்றி பசித்திருக்கும் போதினிலும்
=பாவமந்த யாசகர்கள் பட்டினியா லுறங்கிவிட
சாத்திரங்கள் சொல்லாத சங்கடநாட் களிலேதன்
=சமையலறை நாடாமல் சாத்திரரு முறங்கிவிட
போர்த்தியுள்ள உடுதுணியை பிழைப்புக்காய் அவிழ்க்கின்ற
=பரத்தையரும் கண்மூடி பகல்பொழுதி லுறங்கிவிட
மாத்தியந்த மரந்தாவும் மந்திகளும் தானுறங்க
=மந்திரிப்ப தவிக்கேங்கும் மனசுகள்தா னுறங்கலையே!
**
**

