அட மந்திர மலர்களே

அவள்
பிரசுவித்த அந்தத் தருணத்தில்
நீங்களும் பிரசிவித்தீரோ ...?
உங்கள் மார்பின் சூட்டில்
அவள் துயின்ற நாழிகைகள்
இன்னும் நினைவிருக்கிறதா ...?
நிசப்த நிமிடங்கள் அவள் தேடியபோது
நீங்கள் மட்டும் எப்படி அவளுடன்,
ஒருவேளை என்னைப்போல்
நீங்களும் அவளை பார்க்கும் பொது
மௌனமொழி பேசுவீர்களோ ...!
எத்தனை முறை
நான் தோற்றுப்போயிருப்பேன்
உமது வாசம் ஒதுக்கி
அவள் வியர்வை வாசம் நுகர
அவள் கூந்தல் களத்தில் குதித்தாடியே
உங்கள் பிறவிப்பலன் கண்டீரோ ...!
எத்தனை இரவுகள் அவள் தலை அணையில்
தற்கொலை செய்துகொள்வீர்கள் ,
ஒருவேளை
அவள் மஞ்சத்தில் மையல் கொள்ள
உங்களுக்கும் ஆசையா ...?
என் இதழ்களை விட அவள்
உங்கள் இதழ்களைத்தான் அதிகம் வருடினால்
நானும் உம்மோடு பிரசுவித்திருக்கக்கூடாதா ...?
எந்தச் சோலையில்
உங்களைப் பார்த்தாலும்
அவள் நினைவு வருவதால் என்னவோ
உங்களைக் கையில் ஏந்தியபடி அவளை ச் சந்திக்கிறேன்
உங்கள் இதழ் வருடலும்
அவள் இமை வருடலாய் மாறுதே
" அட மந்திர மலர்களே "
மெல்லிய அவள் விரல் ஸ்பரிசத்தை
நீங்களும் ரசிக்கிறீர்களா...?
ஒருவேளை
உங்களைத் தொட்டே
அவள் விரல் சிவந்ததா, இல்லை
அவள் முத்தமிட்டு நீங்கள் சிவந்தீரா...!
இத்தனை நாள் இணைந்ததால்தான்
இன்று அவள் இறுதி ஊர்வலத்திலும் இணைந்தீரோ ...?
அட மந்திர மலர்களே
உங்கள் புலம்பல்கள்
என் காது மடல்களில் விழுகிறது
உங்கள்
சத்தமில்லாமல் துடிக்கும் ஓசை யான்அறிவேன் ,
சற்று பொறுங்கள் நானும் வருகிறேன்