பாரதியார்
09.11.2017ல் காரைக்குடி
வித்யாகிரி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த
பாரதி விழா கவியரங்கத்
தலைமைக் கவிதை
வார்த்தைகள்
அழுக்கும் பிசுக்குமாய்
அலைந்து கொண்டிருந்தன
நீ தான் அவற்றைக்
குளிப்பாட்டி, தலைசீவி
பொட்டு வைத்து
அலங்கரித்தாய்
கவிதைகள் ஆயின.
இருட்டில் படுத்துக்கிடந்த
வார்த்தைகளைத்
தட்டி எழுப்பினாய்
கிழக்குச் சூரியனின்
ஒளிநகல் எடுத்தாய்
கவிதைகள் ஆயின.
நீண்ட நெடுங்காலம்
ஆள் அரவமற்றுக் கிடந்த
அரண்மனையின்
பூட்டை உடைத்துத் திறந்தாய்.
வண்ண விளக்கேற்றினாய்
சூரியன் வந்து சுற்றிப் பார்த்தான்.
பௌர்ணமிச் சந்திரன் வெட்கப் பட்டான்.
நட்சத்திரங்கள் தலைகவிழ்ந்தன.
சொற்சித்திரங்கள் அமுதத் துளிகளாகி
வானத்தை நோக்கித் துப்பின.
நல்ல தலைவன் இல்லாமல் – இப்போது
நாடு தவிப்பது போல்
நல்ல கவிஞன் இல்லாமல்
தமிழ்த்தாய் மனங் கலங்கினாள்
சொக்கட்டான் விளையாடுவது போல்
சொற்கட்டி விளையாடிய
சோணகிரிகளைக் கண்டு
சோர்ந்து போயிருந்தாள் தமிழ்.
அப்போது தான்
மீசையை மட்டும் முறுக்காமல்
வார்த்தைகளை முறுக்கி வந்தான் பாரதி
அவன் தலைக்கா முண்டாசு கட்டினான்!
தமிழுக்கல்லவா முண்டாசு கட்டினான்.
அவன் தடிதான் தமிழ்த்தாய் கோயிலுக்கு
கொடி மரமானது.
வாழ்க்கை மீது, மனைவி மீது
பிள்ளை மீது, பற்றில்லா துறவி பாரதி.
ஆனால், ஆனால்
தமிழ், இனம், தேசம், மக்கள் மீது மட்டுமா?
காக்கை, குருவி மீதும்
கருணையும் பற்றும் கொண்ட
கவிஞன் அல்லவா பாரதி.
அவன் புயலாகி
உன்மத்தங் கொண்டு
ஊழிக் கூத்தாடிய போது
வானத்தின் இடிகளை – அவன்
வார்த்தைகள் புறந்தள்ளின.
வானவில்லின் ஏழு வண்ணங்களையும்
இவன் கவிதை வண்ணங்கள் பரிசகித்தன.
கைகுலுக்க வந்த மின்னலைப் பிடித்து
கவிதையாய் நட்டான்.
நரைக்காமலே முதிர்ந்தவன்
கிழவன் ஆகாமலே ஞானியானவன்.
பாரதி என்ற சூரியன்தான்.
பூக்களில்
பனித்துளிகளை உறிஞ்சிவிட்டு
தேன் துளிகளை நிரப்பியது.
மரங்களுக்கிடையே காற்றுக்கேற்ப நகரும்
சூரிய எழுத்துக்களை, கவிதையாய்
மொழி பெயர்த்தான்.
தென்றலின் அடவு நாட்டியங்களை
சொற்களில் சேகரம் செய்தான்.
ஆற்றில் புரண்ட நீரில் புரண்ட
மீன் குஞ்சுகளைச் சொற்கள் ஆக்கினான்.
இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டுவா என்று
வெள்ளையனை விரட்ட
பாஞ்சாலி சபதத்தில்
பாரதி சபதமெடுத்தான்.
அக்கினிக் குஞ்சை
புதர்மண்டிய காட்டுமரப்
பொந்திடை வைத்தான்
இருண்ட காலத்தை எரித்த
இவன் கவிதை நெருப்பு
தீப ஒளியாய் சுடர்ந்தது.
விழிச்ச்சுடரில்
மொழிச்சுடர் ஏற்றிய
ஒளிச்சுடர் அல்லவா பாரதி.
எல்லோருக்கும்
எருமையை அனுப்பும் எமன்
எங்கள் பாரதிக்கு
செம்மாந்த கவிஞன் என்ற
சிறப்புக் கருதி
யானையை அனுப்பினான்
அவன் இறுதி ஊர்வலத்தில்
இருபது பேருக்கும் குறைவாம்.
இருக்கட்டுமே.
இருபது பேர்தான் – அவன்
இறந்ததை நம்பினார்கள்.
கவிஞனும் கடவுளும் இறப்பதில்லை...