மீண்டும் சிறைக்குள்
ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்
புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை
வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்
மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைகள் நடந்தேற
சிறகுகள் அறுபட்டு மீண்டும் கூட்டுக்குள் முடங்கின!
கவிதாயினி அமுதா பொற்கொடி