அலைபாயும் மனசு
====================
கட்டியவர் அருகிருக்க கண்டவரை மேய்ந்த்துவிடக்
=கண்களினை வாயாக்கும் கன்றாவி மனசு
பெட்டியிலே பணமிருக்க பிறிதொருவர் கையிருப்பைப்
=பிடுங்கிவிட அலைபாயும் பேயாகும் மனசு
வட்டியினால் வாழுகின்ற வர்க்கமெனும் ஏழைகளை
=வாட்டுதற்கு அலைபாய வழிகாட்டும் மனசு
பெட்டியிலே பிடித்தடைக்கப் பட்டிருக்கும் பாம்பாக
=பெரும்விசத்தை மறைத்திருக்கும் பேர்பெற்ற மனசு.
**
கடலினிலே பாய்வதெனும் கட்டாயந் தனையுடைத்துக்
=கரையினிலே மனிதரிடம் கண்வழியே புகுந்து
படபடப்புக் கொண்டபடி பார்க்கின்ற யாவிலுமே
=பச்சோந்திப் போல்மாறி பாய்கிறதே மனசு.
தொடமுடியா உயரமதைத் தொட்டுவிடும் முடிவெடுத்துத்
=தொந்தரவாய் அலைபாயும் துட்டகுண மனசு
விடமுடியாப் பழக்கமதை விரைவுடனே கற்பதற்கே
=விடைதெரியா தலைபாயும் விளக்கமற்ற மனசு.
**
மெய்யன் நடராஜ்
==============================