காதல் நதியே காதல் நதியே

காதல் நதியே ..... காதல் நதியே !

காதல் நதியே.... காதல் நதியே
சமுத்திரக் கூடல்தான் உந்தன் விதியோ?
கரைபுரண்டு பிரவாகமாய் கவர்தல் புரிந்தும்
சம்சார சங்கமம்தான் கால நியதியோ?

வழிநெடுக பருவநாணலை வசியம் செய்கிறாய்
வரைதாண்டிய விரகக்கோரையை வருடி செல்கிறாய்
துள்ளியோடும் நயனத்தில் விரசம் காட்டி
அள்ளித்தழுவிட ஆசைஅல்லியை எத்தனிக்கிறாய்

சலசலக்கும் நின்திவலை சமிஞ்சை மொழியில்
சபல ஆம்பல்களை கிறக்கி சாய்க்கிறாய்
பாசாங்காய் எட்டநிற்கும் தாமரைத் துறவை
பட்டும்படாமல் உரசி பரிகசிக்கிறாய்

உயிர்விதையில் துளியாகி பருவம் துளிர்த்து
உணர்வேரில் நீர்பாய்த்து நேசம் வளர்த்து
பூவாகி காயாகி காதலில் கனிந்து
பூமியெங்கும் காமன்பசிக்கு படையல் வைக்கிறாய்

காதல் நதியே.... காதல் நதியே
சமுத்திரக் கூடல்தான் உந்தன் விதியோ?
கரைபுரண்டு பிரவாகமாய் கவர்தல் புரிந்தும்
சம்சார சங்கமம்தான் கால நியதியோ?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : படைத்தவர் (19-Mar-19, 10:21 am)
பார்வை : 52

மேலே