அரேபிய பயணத்தின் ஆரம்பம்

ஏதோ ஒரு புள்ளியில்.... யாரோ ஒருவரின் தேடலில் தொடங்கிய இந்த பயணம்...சிலராகி...பலராகி...பல்கி பெருகி பயணித்த தடங்கள்தான் இந்த பரந்த மானுடம்.பயணித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.அப்படிபட்ட காரணங்களும்....தேடல்களுமே இந்த மானுடத்தை செழுமைப்படுத்தியது. இப்போதும் செழுமைபடுத்துகிறது...

பயணங்கள் ஒருபோதும் பயணங்களாய் இருப்பதில்லை. படிக்கட்டுகளாய்தான் மாறுகின்றன. இந்த படிக்கட்டுகளை எவ்வளவு வேகமாய் கடக்கிறோம் என்பதில்தான் ஒரு மனிதனின் வளர்ச்சியும்... தளர்ச்சியும்... இருக்கிறது.

யார் யாரோ செப்பனிட்ட தடங்களில் நாம் இன்று சுகமாய் பயணித்துவிடுகிறோம். செப்பனிட்ட கைகளின் வலியையும், சுமையையும் நம் கால்கள் ஒருபோதும் உணர்வதில்லை. அடிக்கின்ற ஒரு பெருங்காற்றில் அசையாமல் கல்லென கீழே கிடப்பதும்... இலகுவாகி சிட்டுகுருவியின் உதிர்ந்த சிறகென மேலே பறப்பதும்... பயணத்தின் கைகளில் இருப்பதில்லை. பயணிக்கும் பயணியின் கைகளில் இருக்கிறது.அப்படி என்னை சிறகாக்கி பறக்க நினைத்த என் பயணத்தின் கதைதான் இது...

நகரத்தின் நாகரீகங்களும், வளர்ச்சியும் இப்போதுதான் சிறிதாய் முளைகட்ட தொடங்கியிருக்கும் தமிழ்நாட்டின் மூலையில் உள்ள ஒரு குக்கிராமம். மழை கைவிட்ட நிலங்களை இன்னும் கைவிடாமல் இறுக்கி பிடித்திருக்கும் விவசாயிகள். வறண்டு போன விவசாயத்திற்கு மத்தியில் தச்சு தொழில் மட்டும் சிறக்குமா என்ன...?

அலுமினியம், ஸ்டீல், ரெடிமேட் டோர்கள் வந்தபிறகு மரவேலைகளுக்கான தேவை குறைந்துவிட்டது. நாகரீகத்தின் நீட்சி தெரியாமல் இன்னும் மரத்தையே தொங்கி கொண்டிருக்கும் நானும்.... என் அப்பாவும்...தம்பி மட்டும் டிப்ளமோ மெக்கானிக்கல் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருந்தான்.தங்கையின் திருமணம் ஆறேழு வருடங்களுக்கு முன் இனிதாய் முடிந்தது. வாங்கிய கடனுக்கு மட்டும் வட்டிதான் கட்டமுடிகிறது. இப்படியாகத்தான் வாழ்க்கை பயணம் ஆமையின் நடையென நகர்ந்தது.

அப்படிபட்ட ஒரு சூழலில்தான் நண்பர் ஒருவரின் வாயிலாக அந்த தகவல் கிடைத்தது. என் வாழ்க்கையின் அடுத்தகட்ட பயணத்திற்கான ஒரு புள்ளி தொடங்கியது.

அபுதாபிக்கு வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றும், ஏஜெண்ட் ஹைதராபாத் என்றும் ஐம்பதினாயிரம் பணம் கட்ட வேண்டியதிருக்கும் எனவும் தகவல் சொல்லியிருந்தார். நம்பகமான ஏஜெண்ட்...மாதம் இருபதாயிரம் சம்பளம்... தங்குவதற்கான இடம்...சாப்பாடு... எல்லாமே கம்பெனி பொறுப்பு வாங்குகிற சம்பளம் அப்படியே மிச்சம்தான் என ஆசையை தூண்டியிருந்தார்.

கம்பெனி செலவுக்காக முதல் தவணையாக இருபதாயிரம் கட்ட வேண்டும், பாக்கி தொகையை விசா வந்தவுடன், ப்ளைட் ஏறுவதற்கு முன்பாக செலுத்தினால் போதுமென்றும் சொல்லியிருந்தார். எல்லாம் சரிதான், பணத்திற்கு எங்கே போவது...? பணம் வேண்டுமே... எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்... பாடலொன்று மனதில் தோன்றி மறைந்தது.

அப்பாதான் நம்பிக்கை ஊட்டினார்."கவலைப்படாதே பார்த்து கொள்ளலாம். அம்மாவோட செயின் ஒண்ணு இருக்கு. உன் தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு போட்ட நகைய கேட்டு பார்ப்போம். பணத்தை எப்படியும் ஏற்பாடு பண்ணிடுவோம். கவலைபடாதே..." அப்பா எளிதாய் சொல்லிவிட்டார்.

அம்மாவோட செயினு... அம்மா அந்த செயினை எவ்வளவு ஆசையோடு வாங்கினார்கள் என்பதைவிட எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினார்கள் என்று எனக்கு தெரியும். பசு மாடு வளர்த்து, அதுதரும் பாலை வித்து... கிடைக்கும் அஞ்சும், பத்தையும் சேர்த்து... ஆடு, கோழிய வித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில் வாங்கிய நகை அது. நினைக்கும்போதே மனம் வலிக்கிறது. தங்கச்சி நகைகளை கேட்டதற்கு மாமா ஒண்ணும் சொல்லவில்லை." நல்ல விசயத்திற்குதானே கேட்கிறாய், வாங்கிக்க... நல்லா சம்பாதித்து உன் தங்கச்சிக்கு சேத்து செய். அவ்வளவுதான்...நான் வேறென்ன சொல்ல..."

பத்தும்... பத்தாததுக்கு ஊர் செட்டியாரிடம் கொஞ்சம் பணம் வாங்கி பணத்தை ஏற்பாடு செய்தாகிவிட்டது. ஹைதராபாத் சென்றது...முன்பணம் கட்டியது... எல்லாவற்றையும் சொல்லப்போனால் அது சிந்துபாத்தின் கடல் பயணமாய் நீளும் என்பதால், அது வேண்டாம். நேரே அரேபிய பயணத்தின் முகப்புக்கே வந்துவிடுகிறேன்.

சென்னை சென்ட்ரல்... விளக்குகளின் வெளிச்சத்தில் மின்ன தொடங்கியது. மாலை இரவாக மாறும் நேரம். விதவிதமான மொழிகள் காதில் மோதி கடந்து போனது. நான் ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ்க்காக காத்திருந்தேன். முன்பதிவு செய்யவில்லை. நான்காவது ப்ளாட்பார்மில் ஆறு ஐம்பதிற்கு ஒரு ட்ரெய்ன் புறப்படுவதாக, நிலைய முகப்பில் இருக்கும் அந்த பெரிய மானிட்டரில் ஒடிக்கொண்டிருந்தது.

விரைந்தேன்... நான் செல்வதற்குள்ளாகவே அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் நிறைந்திருந்தது. அத்தனையும் வட இந்திய முகங்கள். இந்த கூட்டத்தில் பயணம் செய்வதை நினைக்கும்போதே மலைப்பாக இருக்கிறது. நாளை காலை ஹைதராபாத் போய் சேர்வதற்குள் ஒரு வழியாய் ஆகிவிடுவோம் போல் தோன்றியது. எப்படியாயினும் போயாக வேண்டுமே... மனதை தேற்றி கொண்டு ஏறினேன். கொண்டு வந்த ட்ராலிபேக்கை சீட்டின் அடியில் ஒரு மூலைக்கு தள்ளினேன். அந்த பேக்கில்தான் அனைத்தும் இருந்தது. அனைத்தும் என்றால் அனைத்தும்... எனது உடைகள்... பாஸ்போர்ட்... கட்ட வேண்டிய மீதப் பணம் எல்லாமுமே...

முகங்களை பார்த்தால் எவரையும் நம்பும்படியாக இல்லை. முன்பதிவு செய்யா பெட்டியில் வரும் முகங்களை பார்த்தால் சந்தேகத்தோடே பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை... என்னை பார்க்கும் அவர்களுக்கும் இதே எண்ணந்தான் தோன்றுமோ...?

ஒரு பெரிய சத்தத்துடனும்...தடால் என்று ஒரு குலுக்கலுடனும் ட்ரெயின் புறப்பட தொடங்கியிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே வேகம் அதிகரித்தது. யாரை பார்த்தாலும் முறைப்பது போலவே தோன்றுகிறது. அப்பர் பெர்த்தில் மூன்று பேர் அமர வேண்டிய இடத்தில் ஆறேழு பேர் அமர்ந்திருந்தார்கள். நம்மூரில் மட்டுந்தான் இப்படி... எங்கும் பார்த்தாலும் கூட்டம்... கூட்டம்...அரசும்...அரசியல்வாதிகளும் தங்களது வசதிகளைத்தான் பார்க்கிறார்கள். மக்களை மறந்தே போகிறார்கள். இன்னும் ஒரு நாள்... ஒரே ஒரு நாள்... நாளை காலை ஹைதராபாத்... நாளை இரவு அபுதாபி...சிறகுகள் விரித்து கழுகென பறந்து விடலாம். அரேபிய காற்றை ஆனந்தமாய் சுவாசிக்கலாம்.

மூன்றே மாதங்கள்... கடனை அடைத்து நகைகளை திருப்பி விடலாம். மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டால் போதும், ஒரளவு சம்பாதித்து விடலாம். அப்புறம் ஊரோடு வந்து ஒரு பர்னிச்சர் மார்ட்டோ... ஒரு ஹார்டுவேர் ஷாப்போ... வைத்து கொண்டு இங்கேயே இருந்து விடலாம். நினைக்கும் போதே நெஞ்சாங்கூட்டில் இனிக்கிறது. ஆனால் ஒன்று... இப்படி நினைப்பவர்களுக்கெல்லாம் ஒன்று தெரிவதில்லை. வெளிநாடு என்பது ஒரு மாயக்காந்தம்... ஒட்டிக்கொண்டால் அவ்வளவு எளிதாய் விடுபட இயலாதென்பது...

ட்ரெயின் தடதடத்து கொண்டிருந்தது.மரங்களெல்லாம் பின்னோக்கி மறைந்து கொண்டிருந்தது. கை, கால்களெல்லாம் மரத்து வலி எடுக்க தொடங்கியிருந்தது. யாரும் சிறுநீர் கழிக்க கூட எழுந்திருப்பதாய் தோன்றவில்லை. பெவிகால் போட்டு ஒட்டி வைத்துவிட்டார்களா என்ன...? ஆணி அடித்தாற்போல் இப்படி அசையாமல் இருக்கிறார்களே... இடுப்பில் பை எதுவும் கட்டியிருக்கிறார்களா... சிறுநீர் கழிப்பதற்கென்று... தென்னிந்தியர்களை காட்டிலும் வட இந்தியர்கள் மிகவும் கெட்டிகாரர்களாய் இருக்கிறார்கள். முன்பதிவு செய்யா பெட்டிகளில் பயணம் செய்வதற்கென்றே பிரத்யேகமாய் பயிற்சி மேற்கொள்வார்கள் போலிருக்கிறது.

அனைவரும் அமர்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டிருந்தார்கள். இனிமேலும் சுத்தம் பார்த்தால் ஆகாது. நின்ற இடத்திலேயே அமர்ந்து விட வேண்டியதுதான். சைடு பெர்த்தில் முதுகை சாய்த்து கொண்டு நடைபாதையிலே அமர்ந்து விட்டேன்.பெட்டியை ஒரக்கண்ணால் பார்ப்பதும்... தூங்குவதும்... விழிப்பதுமாய்... பொழுதே விடிந்து விட்டது. சரியாக ஏழு மணிக்கெல்லாம் ஹைதராபாத் ஜங்ஷன் வந்துவிட்டது.

இறங்கினேன்... ஆட்டோ ஒன்றை பிடித்தேன்.ஆபிஸ்க்கு பக்கமாய் ஒரு லாட்ஜை பார்த்து இறங்கி கொண்டேன். அலுப்பு தீர வேண்டுமென்றால் முதல் வேலையாய் குளிக்க வேண்டும். குளித்தேன்... உடை மாற்றி கொண்டு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காலை உணவை முடித்து கொண்டேன். சற்று கண் அயர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. இரவு ஒன்பது முப்பதுக்குதானே ப்ளைட் , அதற்குள்ளாக ஒரு குட்டி தூக்கம் போடலாம். மூன்று மணிக்கு அலாரத்தை வைத்து கொண்டேன். இருந்த அசதிக்கு தூக்கம் சொக்கியது. பறக்கும் கனவுகளுடனே தூங்கிப் போனேன்.

அலாரம் அடித்தது. திடுக்கிட்டு விழித்தேன். மறுபடியும் ஒரு குளியல் போட்டேன். லாட்ஜில் கணக்கை முடித்து கொண்டு வெளியே வந்தேன். ஒரு ஆட்டோ பிடித்து நேரே அலுவலகத்திற்கு வந்தேன். ஆட்கள் வருவதும்... போவதுமாக.. அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சிறிது காத்திருப்புக்கு பிறகு நேரே மேனேஜரை சென்று சந்தித்தேன்.

"அக்கெளண்ட் செக்சனில் உங்களது பாக்கி பணத்தை கட்டி விட்டு என்னை வந்து பாருங்கள்" என்றார். கட்டி விட்டு போய் பார்த்தேன். "இந்தாருங்கள்... உங்களது விசா மற்றும் ப்ளைட் டிக்கெட் .இரவு ஒன்பதரை மணிக்கு ப்ளைட், அலுவலக வாகனம் ஏர்ப்போர்ட்டில் கொண்டு வந்து விட்டுவிடும். அப்புறம்... உங்களோடு இன்னும் மூன்று பேர்... உங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணிக்க இருக்கிறார்கள். அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்." என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் மூன்று பேரா...? நல்லது... பயமில்லை...

வெளியில் வந்து பார்த்தேன். ஷோபாவில் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் அந்த மூன்றுபேர் தனியாய் தெரிந்தார்கள். நம்மினமல்லவா... எளிதாய் கணிக்க முடிந்தது. பெயரை சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டேன். நானும் தமிழ்நாடுதான்... ஐ.டி.ஐ.... பிட்டர்... சிறிது காலம் தனியார் கம்பெனியொன்றில் கான்ட்ராக்ட் பேசிசில் வேலை பார்த்தேன். இரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சாத குறைதான்... யானையாய் வேலை வாங்கி... எறும்பென ஊதியம் தருகிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களும், இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அதான் வேலையை விட்டுவிட்டு, அப்பாவின் தச்சு தொழிலையே பார்த்து கொண்டிருந்தேன்.

அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊர்... வெவ்வேறு காரணங்கள்... இணைந்து கொண்டோம்.

அலுவலக காரில் பயணித்து... நாங்கள் விமான நிலையத்தை அடைந்தபோது மணி சரியாக எட்டு நாற்பது. அந்த இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் பரந்து விரிந்திருந்தது. தரையெல்லாம் உயர்தர கற்கள் பதிக்கப்பட்டு கண்ணாடியாய் பளபளத்தது.நான் அணிந்திருந்த புதுசெருப்பு வழுக்கிவிடும் போலிருந்தது. விதவிதமான மனிதர்கள்... கோட்... ஷூட்... அணிந்து கொண்டும்... டக் இன் பண்ணிக்கொண்டும்... அங்குமிங்கும் பரபரத்து கொண்டிருந்தார்கள்.

முதன்முறை வானத்தில் பறக்க போகிறேன். போர்டிங்கை முடித்துகொண்டு இமிக்ரேஷன் கௌண்டரை நெருங்கினேன். நான்தான் முதலாவதாக சென்றேன். பாஸ்போர்ட்டையும், டிக்கட்டையும் நீட்டினேன். பெயர்... ஊர்... எங்கே செல்கிறீர்கள்... எதற்காக செல்கிறீர்கள்... சில பல கேள்விகள் ஆங்கிலத்தில்... எனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது. தெரிந்த வரை பதில் சொன்னேன். பாஸ்போர்ட்டில் விமான நிலைய சீல் வைக்கப்பட்டு, பாஸ்போர்ட்டும்... டிக்கெட்டும் திருப்பி தரப்பட்டது. நன்றி கூறிவிட்டு நகர்ந்தேன்.

எனக்கு பின்னால் அடுத்த நண்பர்... அவரும் முடித்து கொண்டு, சற்று நேரத்தில் வந்துவிட்டார். மற்ற இருவரும் வந்து விடட்டும் என்று இமிக்ரேஷன் கெளண்டரை தாண்டி அந்த பக்கமாக காத்திருக்க தொடங்கினோம்.நிமிடங்கள் நகர்ந்தேயொழிய அவர்களை காணவில்லை. என்னவாயிற்று அவர்களுக்கு... என எட்டிப்பார்க்காமல் இருந்திருந்தால் இந்த கட்டுரை இந்த பக்கத்தோடு முடிந்துபோயிருக்கும். மாறாக நாங்கள் இருவரும் எட்டிபார்க்க... நிலைய அதிகாரியும் எங்களை பார்க்க " அவர்களையும் கூட்டி வாருங்கள்" கட்டளையின் பேரில் நாங்கள் இருவரும் நிலைய அதிகாரியின் முன் நிறுத்தப்பட்டோம்.

உங்கள் நால்வரின் மீதும் எங்களுக்கு சந்தேகமாய் உள்ளது. உங்களை விசாரிக்க வேண்டும். "உள்ளே வாருங்கள்" என அழைத்து சென்றார்கள். உள்ளே நாலுபேர் அமர்ந்திருந்தார்கள். அறை முழுவதும் ஏ.சி.நிறைந்திருந்தது." அமருங்கள்" என்றார்கள். நால்வரும் அமர்ந்தோம். "உங்கள் பெயர்களை கூறுங்கள்" கூறினோம். "தெலுங்கு தெரியுமா...?" "தெரியாது ஸார்... "ஹிந்தி தெரியுமா...?" "தெரியாது ஸார்..."ஆங்கிலம் தெரியுமா...?" "தெரியாது ஸார்... " "என்னதான் தெரியும்...? "தமிழ் நல்லா தெரியும் ஸார்..." "ஒஹோ... அப்படியா... அப்ப சரி... நாங்க கேக்குற கேள்விக்கெல்லாம் ஒழுங்கா உண்மையா பதில் சொல்லனும்" என்றார். கொஞ்சம் மிரட்டும் தொனியில்... தெலுங்கு வாசனையோடு தமிழை கொஞ்சம் இழுத்து இழுத்து பேசினார்.

"சென்னையில் பெரிய ஏர்ப்போர்ட் இருக்கு... அத விட்டுட்டு இங்கே ஏன் வந்தீங்க...?"
"எங்கள வெளிநாட்டுக்கு அனுப்புற ஏஜெண்ட்... இந்த ஊர் தான் ஸார். அவர்தான் இங்கேயிருந்து டிக்கெட் போட்டார். நாங்களும் எவ்வளவோ சொன்னோம் ஸார்... அவர் கேட்கல."
"இல்ல , நீங்க பொய் சொல்றீங்க... நீங்க இப்படியெல்லாம் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க... தனித்தனியா விசாரிச்சாத்தான் உண்மை வரும். இவனுகளை தனித்தனி ரூமில் உட்கார வைங்க... கொஞ்ச நேரத்துல நான் வந்து விசாரிக்கிறேன்."
"ஸார்... ஸார்... நாங்க யாரும் தப்பானவங்க கிடையாது ஸார்... நாங்க பொழப்புக்காக வெளிநாடு போறோம் ஸார்... எங்கள விட்டுடங்க ஸார்... "
எங்களது கதறல்களை அவர்கள் கேட்பதாய் தெரியவில்லை.இழுக்காத குறையாய் அழைத்து சென்றார்கள்.

நெஞ்சு படபடத்தது. கை, கால்களெல்லாம் சோர்ந்து பலமிழந்ததாய் தோன்றியது. நாக்கு உலர்ந்து விட்டது. தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டோம். எங்கள் சம்பந்தமான அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அரை மணி நேரம் கடந்திருக்கும். அந்த தெலுங்கு தமிழ் அதிகாரி வந்தார்.
"சட்டையை கழட்டு..." "ஸார்... "இழுத்தேன். " கழட்டுன்னு சொன்னேன்." சட்டையை கழட்டினேன். சுற்றி வந்து ஒரு பார்வை பார்த்து விட்டு," சரி இப்ப சொல்லு... எதுக்காக இங்கே வந்தீங்க...?" "ஸார்... வெளிநாடு போறதுக்காகத்தான் ஸார்... " "மறுபடி மறுபடி பொய் சொல்லாதே... அவங்கல்லாம் போட்ட போடுல உண்மையை கக்கிட்டாங்க... அதே மாதிரி நீயும் சொல்லிட்டா நல்லது. இல்லேன்னா வேற மாதிரி விசாரிக்க வேண்டியதிருக்கும்... உன்னோட பாஸ்போர்ட்டெல்லாம் செக் பண்ணியாச்சு. எல்லாம் போலி... அது சரி... பாஸ்போர்ட் எப்படி எடுத்த...? நீயா எடுத்தியா... இல்ல ஏஜெண்ட் மூலமா எடுத்தியா...?"
"எங்க ஊர்ல ஒரு ஏஜென்ட் மூலமாத்தான் ஸார் எடுத்தேன்..."
"சரி... அவங்கள எப்படி பழக்கம்...?"
"அவங்கள இதுக்கு முன்ன பார்த்தது கூட கிடையாது ஸார். இங்க வந்துதான் பழக்கம்..."
"நீ சொன்னதெல்லாம் உண்மைதானே...?"
"ஆமா ஸார்... நாங்க யாரும் தப்பான ஆள் கிடையாது ஸார்." ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கனவுகளும்... ஆசைகளும்... கண் முன் வந்து வந்து போய் கொண்டிருந்தது. தவிப்பும்... பயமுமாக விழித்து கொண்டிருந்தேன். பயத்தில் தூக்கம் தொலைந்து போயிருந்தது.மணியை பார்த்தேன். நான்கு முப்பதை காட்டியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும். விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும் முருகா...

ஐந்தரை மணி... மற்றுமொரு ஆள் வந்தான்."ஸார் கூப்பிட்டு வரச் சொல்றார்... வா போகலாம்..." மறுபடியும் அதே அறைக்கு அழைத்து சென்றான். அங்கே மற்றவர்களும் வந்திருந்தார்கள்.
"இந்தாருங்கள், உங்க லக்கேஜ்... எல்லாவற்றையும் சரிபார்த்து கொள்ளுங்கள். இனி மறுமுறை இங்கே வரக்கூடாது. சென்னையிலிருந்து செல்லுங்கள். இப்போது கிளம்புங்கள்..." நடந்ததற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் விரட்டி விட்டார்.

நடந்து வந்தோம்... நடைகளில் ஒரு சோர்வும்... சோகமும் இழையோடியது. வெளியே வந்தோம். நாங்கள் வருவதற்கும் சூரியன் தன் வெளிச்ச கரங்களை நீட்டுவதற்கும் சரியாக இருந்தது.
"தமிழன் எங்கு சென்றாலும் அடியும்... அவமானமும்தான் கிடைக்கிறது. தமிழனை என்ன தீவிரவாதியென்று நினைத்து விட்டார்களா... முறையாக பெற வேண்டிய தண்ணீரை கூட இவர்களால் பெற்று தரமுடிவதில்லை. இதில் இந்திய இறையாண்மை, ஒற்றுமை என்றெல்லாம் பேசுகிறார்கள்."

"அப்படியெல்லாம் எளிதாய் அரசியல் பேசிவிடாதே நண்பா... அதிகாரிகளுக்கும் இன்ப,துன்பங்கள் உண்டு. அவர்களுக்கென்று ஒரு கடமை உண்டு. ஏதெனும் தகவல் கிடைத்திருக்கலாம். தவறுதலாக நம்மை விசாரித்திருக்கலாம். இதை அவமானம் என்று சொல்வதோ... அடிமைத்தனம் என்பதோ... முறையாகாது. இப்போது நாம் கோபப்பட வேண்டுமென்றால் அது நம் ஏஜெண்ட் மேல்தான். நாம் சொல்ல... சொல்ல... கேட்காமல் இங்கே டிக்கெட் போட்டாரல்லவா... இனி அவரைத்தான் பிடிக்க வேண்டும்."
ஆட்டோ ஒன்றை பிடித்து நேரே அலுவலகத்திற்கு வந்தோம். எப்போதும் போலவே பரபரப்பாக இருந்தது. நேரே மேனேஜரிடம் போனோம். நடந்ததை கூறினோம்.

"இதுக்குத்தான் ஸார் நாங்க சொன்னோம்... மெட்ராஸ்லர்ந்து டிக்கட் போட சொல்லி, இப்ப பாருங்க ஸார்... எவ்வளவு பிரச்சினை..."
"நடந்த நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். ஒண்ணும் பயப்படாதீங்க... நல்லபடியா நான் அனுப்பி வைக்கிறேன். அதே கம்பெனிக்கு இன்னும் கொஞ்ச பேர் வராங்க, அவங்களோட சேர்த்து டிக்கெட் போட்டு அனுப்புறேன். நாளைக்கு நைட்டு மும்பைல ப்ளைட்டு..."
"ஸார் ... மறுபடியுமா ஸார்... எங்களுக்கு மெட்ராஸ்லர்ந்தே போட்டுவிடுங்க ஸார்."
"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல... நான் ஆளுங்ககிட்ட சொல்லிவிடறேன். நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க. இந்த முறை தவறு எதுவும் நடக்காது."

வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். இம்முறை ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு பஸ்ஸில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. மதியம் மூன்று மணி பேருந்து புறப்பட தயாராகி இருந்தது. உயர்தர குஷன் பொருத்தப்பட்ட செமி ஸ்லீப்பர் பேருந்து.ஆட்களை எண்ணி பார்த்து விட்டு பேருந்து புறப்பட்டது. நான் முருகனை வேண்டி கொண்டேன்...
நகரத்திலிருந்து விலகி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க தொடங்கியிருந்தது.டி.வியில் ஏதோ ஹிந்தி படமொன்றை போட்டு விட்டிருந்தார்கள். அது ஒரு பக்கம் ஒடிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தூக்கம் இல்லாததால், உடல் அசதி கண்களை சுழற்றி அடித்தது. சற்று நேரத்தில் தூங்கிப் போனேன். இடையிடையே உணவுக்காக எழுப்பிவிட்டார்கள். நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தோசையோ, இட்லியோ கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் சப்பாத்திகளை விழுங்கி விட்டு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மறுநாள் மதியம் மூன்று மணி . மும்பையின் ஏதோ ஓரிடத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அங்கேயே பக்கத்தில் ஒரு லாட்ஜை பிடித்தோம். இம்முறை வெளி மாநிலத்தவர் கூட இருந்ததால் மொழிப் பிரச்சனை இல்லாமல் இருந்தது. நீண்ட தூர பேருந்து பயணம் எங்களை சோர்வில் ஆழ்த்தியிருந்தது.

லாட்ஜில் வெந்நீர் வசதி இருந்தது. இதமான வெந்நீரில் சுகமாய் ஒரு குளியலை போட்டேன். கொஞ்சம் புத்துணர்ச்சி வந்தது. ஒரு டீ சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்குமென வெளியில் கிளம்பினோம்.

டைட் ஜீன்ஸ் , டைட் டீசர்ட், குட்டை ட்ரெளசர் என மேலங்கம், கீழங்கம் மறைக்காமல்... நவீன இந்தியாவின் நாகரீக தேவதைகள்... நடுரோட்டில் வலம் வருகிறார்கள். கூண்டுக்குள் அடைபட்ட குட்டி முயல்கள் எக்கணத்திலும் வெளியில் குதித்து விடும் அபாயத்தோடு குதித்து கொண்டிருக்கின்றன.

கரு கருவென்றே பார்த்து பழகி போன கண்களை... இந்த அத்திபழ நிறத்தழகிகள் ஆ வென வாய்பிளக்க செய்கிறார்கள். மாலை வெயிலின் கதிர்கள் மேனியில்பட்டு தெறிக்கிறது கண்ணாடி சில்லென... நங்கூரம் பாய்ச்சிய கப்பலாக நகர மறுக்கிறது விழிகள்...

"பேசாம இங்கே ஒரு கடை போட்டுடேன்... இன்னும் வசதியா இருக்கும்."நண்பனின் கிண்டலால் காலியான கிளாஸை வைத்து விட்டு நகர்ந்தேன்.

அறைக்கு திரும்பினோம். மணி ஆறாகி இருந்தது. இரவு எட்டு பதினைந்துக்கு ப்ளைட். பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு தயாராக எடுத்து வைத்து கொண்டேன். கொஞ்ச நேரம் ஒய்வெடுத்துவிட்டு கிளம்பினோம்.

விமான நிலையத்தை வந்தடைந்த போது மணி ஏழு. சற்று நேரம் முகப்பிலேயே நின்றுவிட்டு போர்டிங் போடுவதற்கு கிளம்பினோம்.ஹைதராபாத் விமான நிலையத்தில் பார்த்த அதே பரபரப்பான இயக்கம்,அதே நவீனத்துவம், அதே போன்ற மனிதர்கள்... இங்கேயாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டும். மனதுக்குள் எம்பெருமான் முருகனை தியானித்து கொண்டேன்.

எங்களோடு வந்த மற்ற வெளிமாநிலத்தவர் போர்டிங்கை முடித்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். இம்முறை நாங்கள் பின்னால் நின்று கொண்டு... போன முறை சிக்கலை உண்டு பண்ணிய அந்த இரு நண்பர்களையும் முன்னால் நிற்க வைத்தோம்.

ஒவ்வொருவராய் இமிக்ரேஷனை முடித்துகொண்டு கிளம்பி கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னால் நின்றிருந்த தமிழ் நண்பர்கள் இருவரும் முடித்து கொண்டு கிளம்பினார்கள். நல்ல வேளை... ஒன்றும் பிரச்சினை இல்லை... என்று நினைக்கும் போதே அது நடந்தது.

எனக்கு முன்னால் நின்ற நண்பரின் பாஸ்போர்ட், டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு"நேற்று முன்தினம் ஹைதராபாத் ஏர்ப்போர்ட்டில் இமிக்ரேஷன் முடிக்கப்பட்டு உடனே கேன்சலும் செய்யப்பட்டுள்ளது... ஏன்...?" என கேட்டார். எனக்கும் பக்கென்றது.இப்போ நமக்கும் இதே நிலைமைதானா...? மனம் படபடக்க ஆரம்பித்தது.

அடுத்து நான்... பாஸ்போர்ட்டை பரிசோதித்து விட்டு அதே கேள்வி. எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஏதோ உளறினேன். அவர் நம்ப மறுத்துவிட்டார். "என்னால் கிளியரன்ஸ் தரமுடியாது. அந்த பக்கம் செல்லுங்கள் ... நேரத்தை விரயபடுத்தாதீர்கள்" என்று விரட்டிவிட்டார்.
நாங்கள் இருவரும் ஒரமாய் வந்தோம். அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். அவர்களது பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தோம். அவர்களது பாஸ்போர்ட்டில் ஹைதராபாத் விமான நிலையத்தின் சீல் எதுவும் இல்லை. ஹைதராபாத்தில் எங்களுக்கு இமிக்ரேஷன் முடிந்திருந்தது. அவர்களுக்கு முடியவில்லை.

இப்போது என்ன செய்வது...? அந்த லைனில் மொத்தம் ஒன்பது கெளண்டர்கள் இருந்தது. வேறொரு கெளண்டரில் முயற்சி செய்து பார்க்கலாம். அதையும் தனித்தனியாக செய்யலாம் என அவரும் நகர்ந்து விட்டார். வேறு வழியின்றி நானும் வேறொரு கௌண்டரை நோக்கி போனேன்.

அங்கேயும் அதே கேள்வி... அதே நிராகரிப்பு... அடுத்தடுத்து ஒவ்வொரு கெளண்டரிலும் அப்படியே நிராகரிக்கபட்டது.கிட்டதட்ட ஐந்து கெளண்டர்கள் முடிந்துவிட்டது. அப்படியிருக்கையில் அந்த நண்பரும் எப்படியோ கிளியரன்ஸ் வாங்கிகொண்டு கிளம்பிவிட்டார். இப்போது நான் மட்டும் தனியாய்... திரும்பி பார்த்தேன். என்னோடு வந்தவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் போய்விட்டிருந்தார்கள். மணியை பார்த்தேன். ஏழு நாற்பத்தைந்து...கோபமும்... ஆதங்கமும் குமுறியது. கை... கால்களெல்லாம் பலமிழந்து காற்றில் நகர்வது போல் இருந்தது. அடுத்த கெளண்டரை நோக்கி நகர்ந்தேன். அங்கேயும் நிராகரிப்பு... அடுத்த கௌண்டர்... அடுத்த அதிகாரி...
"விமான நிலைய மேலதிகாரி யாரிடமாவது, எந்த பிரச்சனையும் இல்லையென்று ஒரு கடிதம் வாங்கி வாருங்கள்... கிளியரன்ஸ் தருகிறேன்."
இங்கே எனக்கு யாரை தெரியும்... யாரிடம் வாங்குவேன்... யார் யாரிடமோ போய்கேட்டேன். வெளி மாநிலம்... நான் பேசும் மொழி அவர்களுக்கு புரியவில்லை. ஒருவரும் தரத்தயாராக இல்லை. கண்களில் நீர் திரண்டிருந்தது. எந்நேரமும் உடையும் நிலையிலிருந்தது.

இந்த இக்கட்டில் முருகனை விட்டால் நமக்கு வேறு துணையேது. என் பாக்கெட்டில் எப்போதும் இருக்கும் கையடக்க கந்த ஷஷ்டி கவசம் புத்தகத்தை எடுத்து மனமுருகி தியானித்தேன்.முருகா...!வேலும்... மயிலும் துணையென்று சொல்வார்களே... அது உண்மையென்றால் ஏதாவது ஒரு ரூபத்தில் நீதான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும். அரும்பிய நீர் துளிகள் உடைந்து புத்தகத்தை நனைத்தது.

இன்னும் மீதமிருப்பது ஒரே கெளண்டர் .முருகனை நினைத்தபடி நம்பிக்கையோடு நகர்ந்தேன். அந்த கெளண்டரில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க அழகான பெண் இருந்தாள். பாஸ்போர்ட்டையும், டிக்கெட்டையும் நீட்டினேன். அதே கேள்வி... அதே நிராகரிப்பு...ப்ளீஸ் மேடம்... ப்ளீஸ் கெல்ப்... கெஞ்சினேன். நீர் கோர்த்த விழிகளும்... பாவமான எனது முகமும்... அவர்களுக்கு அனுதாபத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

"ஜஸ்ட் எ மினிட்..." காத்திருங்கள் என கூறிவிட்டு சென்றார். மணியை பார்த்தேன். எட்டை தொட்டிருந்தது. இன்னும் பதினைந்து நிமிடங்களே பாக்கி. படப்படப்பாய் காத்திருந்தேன்...

அந்த பெண் வேறொரு அதிகாரியை கூட்டி கொண்டு வந்தார். நல்ல சிவப்பில்...சற்றே உயரமாய் இருந்தார்.
"வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்..."
"ஐ ஆம் கோயிங் டூ அபுதாபி... மை ப்ராப்ளம்... மை பிரண்ட்ஸ் ஆர் நாட் கம்மிங்... ஸோ கேன்சல் ப்ளைட்... என ஏதோ உளர ஆரம்பிக்க...
" உனக்கு என்னதான் பிரச்சினை... தெளிவா சொல்லு..."தெளிந்த தமிழில் கேட்டார்.

அப்படி அவர் தமிழில் கேட்டதும் எனக்கு இன்ப அதிர்ச்சி... இதுவரை நடந்த எல்லாவற்றையும், அப்படியே சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்த பெண்ணிடம் சொன்னார்.
"நம்மூர் பையந்தான்... ஒண்ணும் பிரச்சினையில்ல, க்ளியர் பண்ணிவிடுங்கள்..."
"ஒண்ணும் பிரச்சினை இல்லையே ஸார்... "அந்த பெண் மறுபடியும் அழுத்தமாய் கேட்டாள்.
"ஒண்ணும் பிரச்சினை இல்ல... பயப்படாதீங்க... தமிழர்களை எப்பவும் நம்பலாம். தமிழர்கள் நம்பி கெட்டதுண்டு... தமிழர்களை நம்பி கெட்டவர்கள் கிடையாது... என்ன தம்பி உண்மைதானே..." அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு,என்னை பார்த்து கேட்டார்.
"ஆமா ஸார்... "
"தம்பி... தமிழன் எங்கே போனாலும் அவனுக்கு மொழிதான் பிரச்சினை. தன் மொழியை நேசிக்கிறேங்கற பேர்ல அந்நிய மொழிகளை தள்ளி வைத்து விடுகிறான்... அந்நிய மொழிகளையும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கலாம்."
"கண்டிப்பா ஸார்... அப்புறம் ஒரு சின்ன அப்ளிகேஷன்... இந்த எடத்துல, என்கிட்ட ஆட்டோகிராப் நோட்டு இல்ல... இந்த பேப்பர்ல உங்க கையெழுத்த போட்டுதாங்க ஸார்... உங்க நினைவா வச்சுக்குவேன்."ஒரு துண்டு பேப்பரை நீட்டினேன்.
சிரித்து கொண்டே போட்டு தந்து விட்டு" நேரமாச்சு வேகமா போ" என்றார். காலை தொட்டு வணங்கிவிட்டு நன்றி சொன்னேன். அந்த பெண் அவரை பார்த்து சிரித்தாள்.
"இதுதான் தமிழன்..." அந்த பெண்ணிடம் பெருமிதத்தோடு சொன்னார்.
நான் விமானத்தை நோக்கி விரையலானேன். நான் உள்ளே செல்லவும்... விமானத்தின் கதவுகள் சாத்தப்படவும் சரியாக இருந்தது. உள்ளே சென்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். பணிப்பெண் ஆங்கிலத்தில் அறிவிக்கலானாள். விமானம் புறப்பட தயாராக உள்ளது. தங்களது இருக்கை பட்டிகளை பொருத்தி கொள்ளுங்கள்.பொருத்தி கொண்டேன். விமானம் மெதுவாக நகர தொடங்கி... பின்பு வேகமெடுத்து சட்டென்று ஒரு கணத்தில் மேலெழும்ப தொடங்கியது. அடிவயிறு ஒரு பந்தாய் சுழன்று மேலெழுந்தது.
வெளியே... மும்பை வெளிச்ச புள்ளிகளால் நிறைந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெளிச்ச புள்ளிகள் கீழே நழுவிக்கொண்டிருந்தது. இன்னும் அந்த படபடப்பு குறையவில்லை. பாஸ்போர்ட்டை வெளியே எடுத்தேன்.அதில் அவர் கையொப்பமிட்டு கொடுத்த அந்த பேப்பர் இருந்தது. திருப்பி பார்த்தேன்.
யாமிருக்க பயமேன்... அன்புடன்...சக்திவேல்...
முருகா...! உன் கருணைக்கு அளவேது... உனைபாடும் தொழிலின்றி வேறு இல்லை... எனை காக்க உனையன்றி யாருமில்லை... மனதுக்குள் டி.எம்.எஸ் ன் பாடல் ஒலிக்க தொடங்கியது... பயணங்கள் ஒருநாளும் முடிவதில்லை... பயணங்கள் ஒருபோதும் பயணங்களாவதில்லை...

எழுதியவர் : பனவை பாலா (2-Apr-19, 11:52 am)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 140

மேலே