மாய கண்ணன்
கண்ணிற்கினியவனே தாமரைக் கண்ணா
கண்ணழகால் நீ கண்ணனோ கண்ணா
கன்றும் தாயும் உன் வேய்ங்குழல் இசைக்கேட்டு
கட்டுண்டு உந்தன் காலடியில் ,ஆய்ப்பாடி
கோபரும் கோபியரும் உன் இசையில் மயங்க
அவர்களும் எப்போதும் உன் நினைவிலேயே ;
மாயவன் மாமாயன் நீ என்று அறியாது
இவர்கள் தாயுருவில் உனக்கு முலைத்தந்திட
வந்த கொடியவள் பூதனையின் விடமெல்லாம்
அவள் முலைவழியாய் உண்டு உமிழ அவளும்
மாள பின் ஒன்றுமறியா சேயாய் அவள்மேல்
நீ தவழ கோபியர்கள் சித்தத்தில் நீ அமர்ந்தாய்
யமுனைக் கரையிலே கோபியர்கள் ஆடைகள்
களைந்து நதியில் குளிக்க அந்த ஆடைகள்
எல்லாம் உன் கையில் குளித்த அவர்கள்
கெஞ்ச குழந்தை நீ சிரித்தாய் ஆடைகள் தந்து
இதெல்லாம் உன் குழந்தைப்பருவ விளையாட்டு
பரப்பிரம்மம் உனைத்தேடி இவ்வுலகம் அதுவே
நீ மேய்த்திடும் ஆவினங்கள் மற்றும் கோபியர்
என்றுணரா சிலர் உன்னைத் தூற்றுவார்
ஏதேதோ பேசுவார் பக்தர்கள் மனம் நோக
நீயோ கண்ணா அதையும் கண்டு சிரிக்கின்றாய்
அவர்கள் சிறுமையைப் பொறுத்து அவரையும்
அன்பால் ஆண்டு கண்ணா நீ என்றும் எப்போதும்
என் மனதில் சிறுபிள்ளையடா தெய்வக்குழந்தை
கண்ணனாம் மாலவன் நீ .