துரோகத்தின் பாடல்

மலை சுமக்க
தயங்கியதில்லை - ஒருநாளும்
அங்கீகாரங்கள்
மறுக்கப்பட்டன - ஒவ்வொருநாளும்

முழுமுற்றாய்
அறுந்தேவிட்டது இதயம்
ஆத்திரம் தாங்காமல்
அதன்மீதுதான் நீங்கள்
ரொம்ப நேரம்
ஆணியடித்துக்கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் வாதத்தை
நானும் ஏற்கிறேன்
உலகம் நல்லவர்களால் நிரம்பியதுதான்
ஆனால் அது உங்களுக்கு
நல்லது மட்டுமே நடக்கும் வரைதான்

கோட்டைகள் மீதிருப்பதாகவே
நான் நம்பிக்கொள்கிறேன்
நீங்கள் குட்டும் போதுதான்
உண்மையான உயரம்
உரைத்துவிடுகிறது

என் அன்பை எடுத்துதான்
நீங்கள் காலணிகளை துடைக்கிறீர்கள்
தூய்மையில்லாமல் தூக்கம் வராதென ஒரு காரணமும்
சொல்கிறீர்கள்

ஒவ்வொரு அழுகைக்கும்
தனிதனி நிறமா
இந்த பேதங்கள்தான்
உங்களின் அசலான குணமா

ஒரு படி அதிகமாகவே
நான் உங்களை நம்பிவிடுகிறேன்
இந்த அறியாமையே விலக்கதானே
ஒவ்வொரு முறையும் உதவிகேட்டு
கைநீட்டும் போதும்
காது கேளாதது போலவே இருந்துவிடுகிறீர்கள்

இவ்வளவு குரூரமாக
இருப்பது தெரிந்திருந்தால்
நான் உங்கள் முகமூடியுடன் மட்டுமே
உறவு வளர்த்திருப்பேன்

நட்சத்திரங்கள் மீது கயமையை பூசாதீர்கள்
அது மனிதர்கள் பற்றி எதுவும் தெரியாத கண்ணியம் நிரம்பியது

விஷத்தை கொட்டிய பிறகு
தெரிகிறது உங்கள் நஞ்சு நிறைந்த நாக்கு
விவரமாக படித்தாலும்
எப்போதும் புரிவதில்லை
மனுஷக்குரங்கின்
போக்கு

எழுதியவர் : மதுரை விஸ்வா (17-Apr-19, 2:42 pm)
சேர்த்தது : viswa
பார்வை : 103

மேலே