`வாராரு வாராரு அழகர் வாராரு பாடல் இப்படித்தான் உருவானது- நெகிழும் தேவா,

'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் 1999 - ம் ஆண்டு வெளியான 'கள்ளழகர்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை இருபது வருடங்களாகப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்தப் பாடல். எத்தனையோ பாடல்கள் மதுரையைப் பற்றியும், அழகரைப் பற்றியும் வந்துவிட்டாலும் இந்தப் பாடல், உயிர்த்துடிப்போடு விளங்குகிறது.
`வாராரு வாராரு அழகர் வாராரு பாடல் இப்படித்தான் உருவானது...'- நெகிழும் தேவா, பெருமிதப்படும் வைரமுத்து! #MaduraiChithiraiFestival
திருவிழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பெயர் போன ஊர் மதுரை. அங்கு, வருடத்தின் பன்னிரண்டு மாதங்களும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அவற்றின் உச்சம் 'சித்திரைத் திருவிழா'. மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றப்படுவதிலிருந்து மதுரையின் கொண்டாட்டமும் தொடங்கிவிடும். அதற்கடுத்து அழகர் கோயில் திருவிழா களைகட்டும். மீனாட்சியம்மனின் திக்விஜயம் முடிந்த பிறகு, மதுரை மக்கள் மீனாட்சியைத் தம் வீட்டுப்பெண்ணாகப் பாவித்து, சொக்கனை மாப்பிள்ளையாக வரித்துக்கொண்டு, திருக்கல்யாண வைபவத்தைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

அழகர் தங்கச் சப்பரத்தில் ஏறி தனது தங்கையின் திருமணத்தைக் காண புறப்பட்டு வரும்போது மதுரையின் பட்டிதொட்டியெங்கும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்னும் பாடல் ஒலிக்கும். சித்திரைத் திருவிழா தொடங்கினாலே 'அழகர் பாட்டு' பீவர் வந்துவிடும் மதுரைவாசிகளுக்கு.

கவிஞர் வைரமுத்து

'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் 1999 - ம் ஆண்டு வெளியான 'கள்ளழகர்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை இருபது வருடங்களாகப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்தப் பாடல். எத்தனையோ பாடல்கள் மதுரையைப் பற்றியும், அழகரைப் பற்றியும் வந்துவிட்டாலும் இந்தப் பாடல், உயிர்த்துடிப்போடு விளங்குகிறது.

திருவிழாவில் மற்ற பாடல்களைவிடவும் கூடுதலான கவர்ச்சி, இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் எப்படி வந்தது? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரின் மூளைக்குள்ளும் துள்ளல் மயக்கத்தைத் தரும் இந்தப் பாடலின் இசையமைப்பாளர் தேவா அவர்களிடம் பேசினோம்.



"சிவன், விஷ்ணு, முருகன், ஐயப்பன் என்று ஒவ்வொரு கடவுள்களோட வழிபாட்டு இசைவடிவங்களும், ராகங்களும் வெவ்வேறா இருக்கும். வைணவத்துல வழங்கப்படுகிற இசைவடிவம், பெருமாளுக்கானது. ஆனால், கள்ளழகருக்கு ஓர் தனித்த இசை வடிவத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துதான் அழகருக்கான பாரம்பர்யமான வாத்தியங்களை இசைக்கோர்வையாகச் சேர்த்து உருவாக்கினோம்.

குலவைச் சத்தம், கொம்பொலி, உருமிமேளம் இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கோத்த இசை அது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னமே நிறையப் பக்தி ஆல்பம் பண்ணியிருக்கேன். அழகர் பாடல்களும் நிறைய செய்திருக்கேன். அதனால எனக்கு அனுபவம் இருந்திச்சு. பாட்டு பண்ணியாச்சு. இப்போ வரைக்கும் பல்லாண்டு காலத்துக்கும் மக்கள் ஆடிக் களிக்கிற அளவுக்கு இந்தப் பாட்டு வந்ததுல எனக்கு அளவில்லா ஆனந்தம்!


போன வருஷம் அழகர் ஆத்துல இறங்கும்போது மதுரையில ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். நான் அமைத்த அந்த இசை அழகரை வரவேற்று எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்ததை நினைச்சு ரொம்ப சந்தோசப்பட்டேன். என்னோட பொண்ணுங்களை மதுரை மாப்பிள்ளைகளுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கேன். ஒவ்வொரு வருடமும் பிள்ளைங்க சொல்லுவாங்க, 'உங்க குரல்தான்பா எல்லாப் பக்கமும்'ன்னு. இதெல்லாம் பூர்வ ஜென்ம பாக்கியம். எனக்கு அழகரும் மீனாட்சியும் தந்த பெருமை இது. இந்தப் படத்தோட இயக்குநர் பாரதிக்கும், பாடலாசிரியர் வைரமுத்துசாருக்கும் என்னோடு இணைந்து குரலில் ஜோடிபோட்ட எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் என் நன்றிகள்" என்றார்.

பாடலை எழுதிய பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பேசினேன். பாட்டெழுதிய அனுபவத்தை தனக்கே உரிய சந்தமொழியில் சொன்னார்.

"படத்தின் தலைப்பு, 'கள்ளழகர்'. இந்தப் பாடல், சமூகத்துக்கான பாடலாக உருமாறுமென்று அப்போது எங்களுக்குத் தெரியாது. படத்துக்குப் பொருந்தும் என்று எழுதியது ஆன்மிகத்துக்கும் பின்னாளில் பொருந்திவிட்டது. வசனமோ, பாட்டோ... திரையோடு நிற்பதைவிடவும் மக்களின் வாழ்வோடு நிற்கும்போதுதான் நிலைபெறுகிறது. எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தும்.

பாண்டிய மன்னனின் அரண்மனைகளெல்லாம் அழிந்துவிட்டன. ஆனால் அவன் கட்டிய கோயில்கள் நிலைபெற்றுவிட்டனவே. அரண்மனை, தனியுடைமை. கோயில், பொதுவுடைமை. மக்கள் தங்கள் கையிலெடுத்துப் பாதுகாக்கத் தொடங்கிவிடுகின்ற எதுவும் வரலாறாய் நிலைகொள்ளும். இதை வரலாறும் சொல்லும். இன்னொன்று, நான் சமயப் பிரசாரகன் அல்ல. கடவுள் உணர்வை மறுக்கின்ற எவருமே, மக்களின் தெய்வ நம்பிக்கையை எப்போதும் மதிப்பர். நானும் அப்படியே. நான் மக்களையும் அவர்களின் உணர்வையும் மதித்ததால்தான் என்னால் இதை எழுத முடிந்திருக்கிறது. மக்கள், அவர்களின் உணர்வைப் புரிந்த என்னையும், நான் எழுதிய வரிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த பாட்டெழுதுகையில் மதம், சாதி என்ற எந்தச் சாயமும் வரிகளில் வந்துவிடக் கூடாது எனக் கவனமாக இருந்தேன். கள்ளழகரும், அவர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் பல நூற்றாண்டுப் பண்பாடு மிக்கது. அந்தப் பண்பாட்டை என் பாட்டில் வைத்தேன். அந்தக் கொண்டாட்டத்தின் உணர்ச்சிப் பெருக்கை மொழியாக வடித்தேன். அதனால்தான் இப்போது அது காலம் கடந்து நிற்கின்றது. இந்தப் பாட்டுக்கு வழிசெய்துகொடுத்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு என் அன்புகள்" என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து

'சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே

சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே

உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே

சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!

வெள்ளி மலையில சாமியடி - இது

ஏழைங்க பக்கமே நிக்குமடி

நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி

நாடுமுழுக்க நன்மையடி

தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம

வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி

கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம்

கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி

வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம்

அழகர் வாழியவே

கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம்

மதுரை வாழியவே

கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம்

இதயம் வாழியவே!'

வைகை ஆற்றின் கரையோரங்களில் பண்பாட்டுப் பாடலாக ஒலிக்கத்தொடங்கிவிட்டது ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாடல். இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே தனது தங்கையின் திருமணத்தைக் காண புறப்பட்டுவிட்ட அழகர் நாளை வைகையில் இறங்குகிறார். தண்ணீரைத் தெளித்து அழகரை வரவேற்போம்.

எழுதியவர் : (18-Apr-19, 9:20 pm)
பார்வை : 647

மேலே