இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்

இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்

வ.ஐ.ச.ஜெயபாலன்

அஞ்சலி

ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்துப் பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 2019-ல் காலமானார். இச்சேதியை சில வாரங்கள் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில், அவன் மார்க்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், 22 வருடங்களுக்கு முன்பே இறந்துபோயிருக்க வேண்டும். 1997-லிருந்து 2019 வரை, 22 வருடங்களாகக் கூடு கலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தப்பட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்துப் பூக்கவைத்து கவிதையாகத் தொடுத்து தந்து கொண்டிருந்தவன் அவன். அதனால்தான், கவிஞர் மஜீத் எழுதிய கவிதைகளைவிட அவன் எழுதாத கவிதைகளும் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.



ஈழத்துக் கவிஞர் மஜீத், தனது கொடிமின்னல்போல் படர்ந்தொளிரும் புதிய சொற் தொடர்களால், செழுமைபெற்ற கவிதைகளுக்காகவும் தலைக்குமேல் வெள்ளம் போனபோதும் கவிதையை உயர்த்திப் பிடித்த மிடுக்குக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவார். கவிஞர் மஜீத்போல, வாழ்வின் பாதிக்காலம் ஒரு கையால் காலனை அமுக்கிப் பிடித்தபடி, மறு கையால் கவிதை எழுதுகிற மனோபலம் உள்ள ஒரு கவிஞனை நான் சந்தித்ததில்லை. ஒவ்வோர் அற்புதத்தின் பின்னரும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். சகோதரி சபிறா மஜீத்போல கவிதைக்காக, திருமணமாகி ஒரு வருடத்தில் நோய்வாய்ப்பட்ட கணவனின் இருப்பை புயலில் தீபமாய்க் காத்து, ஊட்டுங் கரமாகவும் உடுத்துங் கரமாகவும் கவிதை கேட்டுப் படியெடுக்கும் வரமாகவும் வாழ்ந்த இன்னொரு காதல் மனைவியை நான் சந்தித்ததில்லை. நான் ஒரு விமர்சகனல்ல என்பதாலும் சககவிஞன் என்பதாலும் கவிஞர் மஜீத் பற்றிய என் பதிவு அவர் எழுதிய கவிதைகளை மட்டுமே பேசவில்லை. ஒடுக்கும் கொடுங்கோல் நோயின் ஆட்சிக்குப் பணியாது, எழுதுகோலை உயர்த்திய அவரது கவிச்செருக்கு பற்றியும் பேசுகிறது. அவர் நோயற்றிருந்தால், தொட்டிருக்கக்கூடிய உச்சங்களையும் உய்த்துணர்கிறது. அதனால், இது விமர்சனமுமல்ல மதிப்பீடுமல்ல. உணர்ச்சிவசப்பட்ட மிகைப்படுத்தலெனத் தோன்றினால், எனக்குத் தொழில் கவிதை என்பதுதான் என் பதிலாகும்.



கவிஞர் மஜீத்தின் வாழ்க்கைக் குறிப்பை இணைப்பது என் கருத்துகளுக்கு வலுசேர்க்கும்.

கவிஞர், கேரளம்போல கலைகளும் நெய்தலும் மருதமும் நீர்நிலைகளுமாக அழகு செழிக்கும் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பொத்துவில் நகரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் 03.10.1969-ல் பிறந்தவர். கவிஞரின் கல்விப் பருவமும் தேடலும் பொத்துவிலில் தேங்கிவிடாது, அக்கரைப்பற்று பாடசாலை, யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி எனத் தொடர்ந்தது அவரது அதிர்ஷ்டம்தான். அவரது கவிதை மற்றும் அரசியல் வாழ்வில், யாழ்ப்பாணக் காலமும் அக்கரைப்பற்றுக் காலமும் முக்கியமானவை. யாழ்ப்பாணக் காலத்தில்தான் கவிஞர், ஈழ விடுதலை அமைப்பின் தலைவர் தோழர் வே.பாலகுமாரனைச் சந்திக்கிறார். ஈழத்தில் பாலகுமாரன் என்றால் மனசு நிறைந்த தோழமையும் வீடு நிறைந்த அரசியல் இலக்கியப் புத்தகங்களும்தாம் நினைவில் வரும். தன்னையும் தன் திசையையும் தேடிய கவிஞரின் இளமையில், பாலகுமாரனுடன் நிகழ்ந்த வாசிப்பும் புத்தகப் பரிமாற்றங்களும் விவாதங்களும் முக்கியமான மைல்கற்களாகும். அவரது யாழ்ப்பாண காலத்தில்தான், இடதுசாரித் தத்துவ விவாதங்களும் ‘வானம்பாடி’ கவிதை வாசிப்பும் பின்நவீனத்துவ இலக்கியத் தேடலும் ஆரம்பித்தன.

கவிஞர் மஜீத், கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் ஆர்வ(மு)ம் நிறைந்தவராக ‘வானம்பாடி’ கவிதைகளில் ஈடுபாடும் பின்நவீனத்துவ எழுத்துகள் பற்றிய அறிமுகங்களோடும் யாழ்ப்பாணத்திலிருந்துஅக்கரைப்பற்றுக்குத் திரும்பிவந்தார்.

ஐந்து வேளையும் பாங்கொலிக்கும் அக்கரைப்பற்று, கிழக்கில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய ஊராகும். அந்த நாள்களில் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்றிலும் அயலிலும் நுஃமான், மெளனகுரு, சண்முகம் சிவலிங்கம், சோலைக்கிளி, உமா வரதராசன், வேதாந்தி என ஈழத்து நவீன இலக்கியத்தின் முன்னணிப் படை ஒன்று தீவிரமாக இயங்கிவந்தது. இந்தப் பின்னணியில்தான் 90-களின் ஆரம்பத்தில் கவிஞர் மஜீத், தன் காவியக் கனவான வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரது 49 வருட வாழ்வை நோய்க்கு முன் - நோய்க்குப் பின் எனப் பகுப்பது தவிர்க்க முடியாதது. மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடித்தார்.

கொடுக்க ஒரு கையும் கெடுக்க மறு கையுமாக ஆட்டம்போடும் பிசாசுத்தேவதையான மனிதன் விதி, கவிஞர் உடல் நலத்தை கெடுக்குமுன் இரண்டு வரங்களைக் கொடுத்திருந்தது. கவிஞர் மஜீத்தின் இறுதி கணம் வரைக்கும் உடனிருந்த அந்த வரங்களைப் போற்றுகிறேன். மரணத்துள் தத்தளித்த கவிஞனின் பலமாகி, இரட்டையர் என இலக்கிய உலகம் வியந்திட வாழ்ந்த கவிஞர் றியாஸ்குரானாவின் தோழமை மகத்தான வரம். அதனை மிஞ்சியப் பெருந்தவம் கவிதையோடும் கவிஞனோடும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட சபிறா மஜீத்தின் காதலாகும். அது திருமணம் நடந்த ஒரு வருடத்துக்குள் கவிஞன் நோய்ப்பட்டபோது விசுவரூபம் எடுத்த சிநேகமாகும். நோயுள் விழுந்து நொடித்த தன் கணவனை சாவின் புதைமணலில் மூழ்கவிடாமல் அவனோடு சேர்த்து அவனது உயிரான மகளையும் ஆன்மாவான கவிதையையும் சுமந்து வளர்த்த இதிகாசக் காதல் மனைவிக்கும் நண்பர்களுக்கும் நாளை அவனைக் கண்டெடுத்துக் கொண்டாடப்போகும் தமிழ் இலக்கிய உலகத்துக்கும் என் அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.

‘மழைக்காலம் அருவருப்பாகவும்
கூதல் ஒரு வியாதியாகவும்
எம்மை அச்சமூட்டுகின்றன
எனக்குள்ளிருந்த பறவை
தூக்கிட்டுக்கொண்டது.
எழுத்துகள் புழுக்களாகி
என்னை மூடிக்கொள்கின்றன
எனது பறவையைப் பாட அழைக்கிறேன்
எனது சொற்கள் துள்ளிச் சென்று
அவர்களின் கண்கள் மீன்களான
ஆற்றில் குதித்துச்
சாகின்றன.’



தெருக்களைக் கண்காணிப்பது
புலிகளென்றால்
வீடுகளையும்
வாழ்வின் அந்தரங்கங்களையும்
சோதித்தபடி சிங்கங்கள் குடியிருக்கின்றன.
வானொலிப் பெட்டிகள்,
தொலைக்காட்சிப் பெட்டிகள்,
எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு
பாய்ந்து வந்த சிங்கங்கள்
மூளை வெளிகளையும் கைப்பற்ற
முயன்றபடி இருக்கின்றன.
கண்களிலிருந்தும்
நாவுகளிலிருந்தும்
சித்திரங்களிலிருந்தும்
எதிர்பாரா நேரங்களில்
கர்ஜித்தபடி பாய்ந்த
சிங்கங்கள் அச்சுறுத்துகின்றன.
சொற்களைக் கடித்துக் குதறும்போது
அதன் கடைவாயிலிருந்து
கசியும் இரத்தத் துளிகள்
கோடையை நனைக்கின்றன
எனது வெளியை
பங்குபோட்டு
சிங்கங்களும் புலிகளும்
பகிர்ந்துகொண்டன.
இரண்டின் வால்களையும்
முடிந்துவிட்ட எவனோ
எனது இடத்தின் மீது நிரந்தரமான
காயத்தை ஆரம்பித்துவைத்தான்
அதிலிருந்து வடியும் ரத்தம்
நிரந்தரமானது என அடிக்குறிப்பும்
எழுதி வைத்துவிட்டான்.
எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத் துளிகள்
விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான்.

எழுதியவர் : வ.ஐ.ச.ஜெயபாலன் (8-May-19, 7:31 pm)
பார்வை : 26

மேலே