இதயத்தின் ஈழத்துச் சுவடுகள்
அம்மா சரணம்
என் குங்குமத்தில் இருப்பவளே
என் மாங்கல்யத்தை காப்பவளே
என் நம்பிக்கையே
என் பலமே
என் வினையே
என் மலர்ச்சியே
என் முத்தியே
என் தமிழே
என் வேத நாயகியே
உன் ஈழக்குழந்தை கருவில் அழுது சிதைந்தது ஏனோ தாயே?
உன் தமிழர்களின் நெஞ்சங்கள் மாவீரர்களின் விதை குழிகள்
உன் அடியார் நாம் ஈழத்தமிழர் பஞ்சமா பாதகங்களை
உன் சூலத்தால் துவம்சம் செய்து ஒளியுடன் எழுந்து
உன் துணையுடன் அறப்போர் செய்வது எப்பொழுது அன்னையே?
✨✨✨✨✨✨✨
எம் வானில் விடிவெள்ளி தோன்றாதா
சத்தியம் பேணி
அகிம்சை பேசி
புலால் மறுத்து
பற்று அறுத்து
பிரம்மச்சாரியம் ஏற்று
மௌன விரதம் பின்பற்றி
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து
தமிழ் உணர்வுடன் வாழும்
ஒவ்வொரு தமிழனும்
அறப்போருக்கு தயாராக
பல்லாயிரம் காந்திகள்
ஈழத்தின் உதய வானில்!
✨✨✨✨✨✨✨✨
பட்டாம் பூச்சியின் கனவு
நிலவுக்கு பறந்து செல்ல வேண்டும்
வசந்தத்தில் கார்த்திகைப்பூக்கள் எங்கும் பூத்திருக்க வேண்டும்
நிலவில் ஈழக்குழந்தையை பார்க்க வேண்டும்
ஈழக்குழந்தையின் சிரிப்பொலி எங்கும் கேட்க வேண்டும்
கார்த்திகைப்பூ ஒன்றின் மடியில் நான் மடிய வேண்டும்
மறுநாள் கார்திகைப்பூவாய் மலர வேண்டும்
✨✨✨✨✨✨✨
குருதிப்பூக்கள்
எங்கள் இரத்த பூமியின்
பூக்களில் இரத்தக் கறை
கரங்களில் இரத்தக் கறை
சகாப்தங்கள் எத்தனை தாண்டினும்
ஆறாதா நமது இதயத்தின் வடு
காயாதா நமது இரத்தக் கண்ணீர்
தீராதா நமது சுதந்திர தாகம்
✨✨✨✨✨✨✨
எமது காலம்
தமிழர் நாம் களை எடுக்க மறந்ததினால் மறுத்ததினால்
சாகுபடி இன்றி தரிசாகிறது நமது நிகழ்காலம்;
நம்பிக்கையின் பிடியில் நமது எதிர்காலம்.
✨✨✨✨✨✨✨
மாவீரா... வருவீரா...!
நேற்று நீங்கள் விதையாக;
உங்கள் தியாகம் தந்த வீரம் உரமாக
பாலைவனத்து மலரை காணும்
நம்பிக்கையில் நாங்கள்;
நாளைய குருத்து அரும்பாகி துளிராகி தளிராகி
இலையாகி பழுப்பாகி சருகாக முதல்
வந்துவிடுங்கள் அண்ணா!
✨✨✨✨✨✨✨