நானென்ற நான்

உடல்
நிலம்
கருவி

என் பெயர் தாங்கும் உடல்
என் எண்ணங்களை விதைக்கும் நிலம்
விதைத்தவற்றை அறுவடை செய்யும் கருவி

உடலுக்கென்று சில
நிலத்திற்கென்று சில
கருவிக்கென்றும் சில
வரையறைகளுண்டு
ஆனால் எனக்கோ ஏதும் இல்லை

என் வரையறையற்ற உத்தரவை
மதிக்காத உடலை
நானும் மதிப்பதில்லை
அதற்கு அறிவுரை சொல்கிறேன்
சோர்ந்து போகையில் உற்சாகப்படுத்துகிறேன்
துக்கத்தில் தேற்றுகிறேன்
மகிழ்ச்சியில் அமைதி காக்கிறேன்
காமத்தில் சுதந்திரம் தருகிறேன்
காதலில் இறக்கை அணிவிக்கிறேன்

இருந்தும் அது மதிப்பதில்லை என்னை
நானும் மதிப்பதில்லை

ஒரு நாள் கிடத்தப்பட்டிருக்கும்
வீட்டின் நடுவில்
என்னைச் சார்ந்தவர்கள்
அவ்வெற்று உடலைச் சூழ்ந்து
கொண்டு அழலாம்
மாரிலும் மடியிலும் அடித்துக் கொள்ளலாம்
சிலர் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கலாம்
இன்னும் சிலர் வெற்று வேதாந்தம் பேசலாம்

நான் வழக்கம் போல் என்
நைந்து போன பிளாஸ்டிக் நாற்காலியில்
சாவகாசமாய் அமர்ந்து கைப்பேசியில்
தட்டச்சிக் கொண்டிருப்பேன்
பெரியார் தன் மனைவின்
இறப்பைப் பற்றி எழுதியதைப் போல
என் பறத்தலுக்கு தடையாய்
இருந்த ஒரே ஓர் உடலும் இனியில்லை
நான் புள்ளாய் மாறிப் போவேன்
இப்பரந்த வெளியில்
காற்றோடு காற்றாய் வாள் வீச்சைப் போல
இறகை வீசிப் பறந்து போவேன்
என்று

அப்பொழுதும் நான் நான் தான்
இப்பரந்த வெளியை நான்
மதிக்கத் தேவையில்லை
இவ்வெளிக்கும் அது தேவையில்லை தானே!!!

எழுதியவர் : marislevam (22-Jun-19, 1:47 pm)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 50

மேலே