வெற்றிக்கொடி கட்டு

#வெற்றிக்கொடி கட்டு

வெள்ளையனை அன்று ஓட விரட்டினோம்
கொள்ளையனை என்று ஓட விரட்டுவோம்..?
வெள்ளையுடுத்திய சகுனிகள் இங்கே
பல்லை பிடுங்குவோம் பயமும் கொன்றே..!

எழுதி எழுதியிங்கு கிழித்தது போதும்
பழுது மனிதரை கிழித்திட வாரும்
மண்டியிடவா பிறவியெடுத்தோம்
கூண்டுக் கிளியல்ல சிறகை விரிப்போம்…!

தமிழன் பூமியை தரித்திரம் தொடுமோ
வந்தவன் போனவன் சுவடுகள் தடமோ
பாதம் பதிப்பவன் கால்களும் எதற்கு
பாதகமில்லை பாதங்கள் விலக்கு…!

தாள் பணிந்து விழுந்து கிடந்தால்
தலையும் கொய்து பந்தென அடிப்பார்
நிமிர்ந்த நடையினில் வீரம் கூட்டு
எதிரிகள் எவர்வரின் பாடம் புகட்டு..,!

பச்சை வயலுடன் கிணறும் தோப்பும்
எட்டு வழிக்கென இறைத்திட மாட்டோம்
எத்தனை சோதனை இடர்கள் நித்தம்
எத்தனை அழிக்க வகுப்போம் திட்டம்..!

போகட்டும் போகட்டும் என்றே போனால்
சாகட்டும் சாகட்டும் என்றே கொல்வார்
திக்கெட்டும் தமிழர்கள் சேரட்டும் மொத்தம்
போரிட்டு ஒலிக்கட்டும் வெற்றியின் சத்தம்..!

நாளைத் தமிழகம் நல்லவர் கையில்
வாகை கொள்வார் விடியல் விரைவில்
வெற்றிக் கொடி எங்கள் வீதிக்கு வீதி
ஏற்றியே மகிழ்வோம் அனைவரும் கூடி..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (7-Jul-19, 4:33 pm)
பார்வை : 2901

மேலே