மூன்று கவிதைகள்

அதற்குமுன்
பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்ட
உனது நிலத்திற்கு
செம்மஞ்சள் ரோஜாக்கள் பூக்கும்
செடி ஒன்றை எடுத்துவந்தேன்

மணல் சூழ்ந்துவிட்ட அந்நிலத்தில்
இனி உயிர்கள் துளிர்க்காது என்றாய்

நிலம் பிளந்து வெளிபடும் அசைவு
மண்புழுக்களல்ல
விஷப்பாம்பின் நாக்குகள் என்றாய்

பிணங்கள் அழுகி
துர்வாடை சூழ்ந்த காற்றில்
செம்மஞ்சள் ரோஜாக்களின் மணம்
அவ்வளவு அருவருப்பாவனவை என்றாய்

***

அந்தக் கறுப்பெறும்பை
நீங்கள் என்னறையில் பார்த்திருக்கக்கூடும்
சதா அறைத்தரையில் ஊர்ந்துக்கொண்டிருக்கும் அதை
நீங்கள் அறிய நினைத்தால்
ஒரு கைப்பிடி சீனியை எடுத்து வீச உங்களை அனுமதிக்கிறேன்.
சிதறிக்கிடக்கும் மினுமினுப்புக்கு நடுவில்
அது ஊர்வதை நீங்கள் உணர்வீர்கள்
நட்சத்திரங்களுக்கு நடுவில் அமாவாசையை உணர்வீர்களே
அப்படி.

***

வேறெங்கும் போக வக்கற்ற கறுப்பெறும்பு
இரவுகளில் என் மயிர்க்கால்களுக்கு நடுவில்
படுத்துக்கிடப்பதை நீங்கள் பார்க்கலாம்.
நெடுநாள்களாக அது கானகத்துக்குத் திரும்புவதாக எண்ணிக்கொள்கிறது.
ஒரு எறும்பு ஒரு மனிதனுடன்
சரிசமமாக வாழ்வதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
காமம் தீண்டும் இரவுகளின் உஷ்ணங்களை
அது எவ்வாறு எண்ணிக்கொள்கிறது
என்பது பற்றியே எனது குழப்பங்கள் உள்ளன.

எழுதியவர் : ம. நவீன் (12-Jul-19, 8:24 pm)
Tanglish : moondru kavidaigal
பார்வை : 148

மேலே