அந்நிய வாசம்

வானம் பார்த்து
வாழ்வு ஓட்டும் ஊரிலே
கூலி பார்த்து
நாளை ஓட்டும் குடும்பம்!

அந்தக் குடும்பத்தில்
மகனாய்ப் பிறந்ததுமே
மகுடமாய் ஏறிவிட்டது
குடும்ப சுமையும்!

அரை காணி நிலம் வித்து
அக்காள்கள் மணம் முடித்தேன்!
கால் காணி மிச்சம் வைத்து
கால் வயிறு கஞ்சி குடித்தோம்!

காவிரியும் வற்றியது!
கால்காணியும் வற்றியது!
அதை நம்பி பிழைப்போட்டிய
அடிவயிறும் வற்றியது!

வயல்காடு தான் ஏமாற்றியது!
அதை விற்று
அயல்நாடாவது செல்ல நினைத்தேன்!

அதற்கும் வந்து நின்றான்!
பட்டா என் பேரிலென
பங்காளி!

அக்காள்கள் சரடு வித்து
முக்கால் தர,
மீதிக்குப் பிள்ளையின்
இடை கொடியை
அடகு வைத்தேன்!

கையில் ஒன்றும்
கர்ப்பத்தில் ஒன்றும் கொடுத்து
வானேறி செல்கின்றேன்
வெளிநாடு...

கால்காணி என்றாலும்
முதலாளி அங்கே!
அரை லட்சம் சம்பளம் வந்தும்
அடிமையாய் இங்கே!

பொடிபட்டு உடம்பெல்லாம்
சுட்டெரிக்கும்!
சுண்ணாம்பால் தோல் எல்லாம்
துளை பொரிக்கும்!
நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த
தருணங்கள் பல...
இருந்தும்...
படுகின்ற துயரெல்லாம்
'நலம்' என்ற சொல்லில்
அலைபேசியில் திரை மறையும்!

கௌரவமாய்ச் சொல்லி விடுகிறோம்...
வெளிநாடு வேலை என...
என் கட்டில் மெத்தை தான் அறியும்
என் கண்ணீர் கவிதைகளை...

விட்டு வந்து வருடம் நான்காயிற்று!
பல்லின்றி பார்த்த மகள்
பாரத்தவுடன் 'அப்பா' என அழைப்பாளா...

ஆச்சர்யமாய்ப் பார்க்கின்றன...
தலையணையும் கட்டில் மெத்துயும்...
கண்ணீரால் கழித்த இரவுகள் மத்தியில்
புன்முறுவல் பூத்து விட்டம் பார்க்கிறேன்!
'நாளை டிக்கெட்' என்ற
செய்தி கேட்டவுடன்...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (31-Jul-19, 3:46 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : anniya vaasam
பார்வை : 101

மேலே