முதல் தமிழ்ச்சங்கம்

======================.
ஆயிரம் சங்கம் அகிலத்தே வந்தேதான்
போயின, ஆனாலும் போகாது – வாயினால்
அம்மா வெனவிளித்து ஆனந்தம் மீட்டிடும்
நம்குழந்தைச் சங்கத் தமிழ்.
*
சங்கம் வளர்ப்பதற்குச் சங்கடப் பட்டோர்க்கும்
பொங்கும் தமிழ்பேச்சைப் பூவிதழால் – மங்களமாய்த்
தூவும் மழலை, துயர்மறந்து நாம்மகிழ
மேவும் முதற்சங்க மிங்கு.
*
குழந்தையெனுந் தென்றல் குடும்பத் திருப்பின்
பழந்தமிழ்ச் சங்கம் பதுங்கி – அழகிய
திந்த அருந்தமிழ்த் தேன்சங்க மென்றெண்ணி
வந்தவழிச் செல்லும் வறண்டு
*
மொழியொன்று வாரா முதற்காலம் தொட்டு
மொழிந்த முதற்சங்க மென்று – வழிவழியாய்ப்
பெற்றெடுத்தப் பிள்ளைப் பெருஞ்செல்வப் பேசுமொழி
உற்றவர்க்குச் சங்கத் தமிழ்.
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Sep-19, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89

மேலே