போத்லெரின் குக்கர்
எண்ணங்களில் உருவும்
தீராத சிக்கல்களை
மயானத்தின் அமைதியை
இறுதியில் யாரையும்
அவமானப்படுத்தி விடும்
மரணத்தின் குசும்பினை
இவ்வறைக்குள் இருந்தே
தனியே நான் எழுதினேன்.
அறை...
ஒரு குக்கரில் பூதம்
வெந்து கொண்டிருப்பதைப்போல்
என்னை எழுத வைத்தது.
கால்களை மடக்கி கொண்டும்
அவ்வப்போது நீட்டியும்
தாள்களில் கரைந்து சிலிர்த்த
பெரும் கனவொன்று
கலைந்து போன தருணத்தில்
சில சிதிலங்களுடன்
சில குற்றங்களுடன்
சில தியாகங்களுடன்
ஷார்ல் போத்லெர் என்னை
ஆவி கனிய முத்தமிட்டு
இருட்டில் மறைந்தான்.
பின்புதான்...
உவப்பு மிகுந்த எறும்பொன்று
எச்சில் என்று கருதாமல்
பாத்திரக்காட்டினை சுழல்வது போல்
உலகில் நீக்கமற்று நிறைகிறேன்.
என் சொற்கள் ஓய்வு கருதி
பால் வடிந்து நின்ற மரத்தோடு
பேசிக்கொண்டிருந்தது.
(நவீனக் கவிதையின் தந்தை ஷார்ல் போத்லெர் பாரிஸ்.)