கயாக்களே போதிகளே

கயாக்களே! போதிகளே!



கயாவின் மரங்களே!
உங்கள் நிழலில் இளவரச சித்தார்த்தர்களுக்கு மட்டும் தான் இடமா?
ஏழை புத்தர்களுக்கு இல்லையா?

போதி மரங்களே!
உங்களை நாடி வந்தவர்களுக்கு
நம்பிக்கை தந்து
கால்களை வேர்களாய் ஊன்றக்
கற்பிப்பது தானே உங்கள் அறம்!

நீங்கள் போலிக்கால்களையாவது
தந்திருக்கலாம்!
ஆனால் போலியோ நோயினை அல்லவா தந்திருக்கிறீர்கள்!

சித்தார்த்தன் புத்தனானான்!
போதி மரத்தடியில்!

எங்களை புத்தகப் பொதி மரங்கள் ஆக்கிய
நீங்கள் போதி மரங்கள் இல்லை!
போலி மரங்கள்!

எம்மை மருத்துவனாக்க வேண்டாம்!
மன நோயாளி ஆக்கி விடாதீர்கள்!எமக்கு வலிமை தர வேண்டாம்!
வலிப்பு நோயைத் தந்து விடாதீர்கள்!

ஏன் இத்தனை வலி!
கல்வி என்ன, மயக்க மருந்தின்றி நடக்கும் அறுவை சிகிச்சையா?
உங்கள் சிகிச்சைக்குப் பின் நாங்கள் சுய நினைவையே இழந்து விடுகிறோம்!

மயிலாக இருக்கிறோம்! தோகைகளை பிய்த்து விட்டு பாடச் சொல்கிறீர்கள்!

குயிலாக இருக்கிறோம்!
குரல்வளையை நெறித்து பாடச் சொல்கிறீர்கள்!

மீனாக இருக்கிறோம் தூண்டிலில் மாட்டாமல் இருக்கக் கற்றுக் கொடுங்கள்!
தரையின் மீது நடக்கச் சொல்லாதீர்கள்!

மானாக இருக்கிறோம்! வேட்டைக்கு இரையாகாமல் தப்பி ஓட கற்றுக் கொடுங்கள்! ஏன்
எங்கள் கால்களில் கண்ணிகளை மாட்டுகிறீர்கள்!

நாங்கள் தேனீக்கள்!
பூக்களைத் தேடிச் செல்கிறோம்!

பாருங்கள்! உங்களால் பட்ட காயங்களில் ஈக்கள் மொய்க்கின்றன!

மலரின் வாசம் தாருங்கள்! தேனீக்களாக மீள! நீங்கள் தருகின்ற
மலத்தின் வீச்சம் எங்களை ஈக்களாக்கி விட்டது!

கல்வி கண்ணா? இல்லை இல்லை
கண் நோய்!
எசமானாயிருந்தால் கிட்டப் பார்வை!
ஏழையென்றால் எட்டப் பார்வை!



கல்வி ஒரு சுயப் பிரசவம்!
அழகான சுகப்பிரசவம்!

ஆனால் இங்கு பிரசவ வலியை மட்டும் தந்து எங்கள் பிறப்பையே சிதைத்து விடுகிறீர்கள்!

பள்ளிகளே! நீங்கள் போதியாயிருங்கள்! சித்தார்தர்களை புத்தராக்குங்கள்!

ஆசைகளை அறுத்தெரியக் கற்றுக் கொடுங்கள்!
ஆசை விதைகளை விதைக்காதீர்கள்!

பள்ளிகளே! நீங்கள் கலிங்கமாக வேண்டாம்!
நாங்கள் எல்லோரும் மன்னரில்லை!
ஒரு அசோகர் மாறி விடுவார்!
ஒரு லட்சம் வீரர்கள் மாய்ந்து விடுவர்!

நீங்கள் தேடலைக் கற்பிக்கவில்லை!

இப்போது நான் தொலைந்து நிற்கிறேன்! என்னை எப்படித் தேடுவது?

-இப்படிக்கு பித்தர்களான புத்தர்கள்!

எழுதியவர் : பாபுகனிசன் (8-Oct-19, 7:17 pm)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 78

மேலே