அடங்கு சர்வதேச எயிட்ஸ் தினத்திற்காக
=============================================
கொண்டவர் தானிருக்க, கூடா தவரொடு
கண்டதும் கொள்ளும் கலவிக்குத் – தண்டனையாய்த்
தொற்று மணுக்கள் துணைக்கும் பரவியே
கற்பிக்கும் பாடம் கசடு.
**
ஆட்கொல்லி நோயின் அணுக்கள் குருதிக்குள்
ஆட்கொள்ளா வண்ணம் அணையிட்டுக் - காட்டு.
சுமைகொண்ட வாழ்வின் சுகதேக இன்பம்
இமையாகி காக்க இணங்கு.
**
இல்லாளை நீங்கி இடம்பெயர நேரினும்
நல்லொழுக்கம் பேணின் நலம்வாய்த்து – தொல்லைதரும்
பொல்லாத நோயுன் புனிதத்தைச் சீண்டாது
சொல்லாமல் ஓடும் சுருண்டு.
**
காரிருளில் மூழ்கிக் கனிச்சா றருந்தியதும்
பேரிடியில் சிக்கும் பெருந்தவறை – நேரினிலே
சந்தித்து நிம்மதியைச் சாகடித்தக் கோரத்தைச்
சிந்தித்துப் பார்த்தல் சிறப்பு.
**
எச்ஐவி என்னும் எயிட்ஸ்நோய்க் கிருமியுனைத்
துச்சமென வாக்கும் தொடவேண்டாம் – எச்சிலுளப்
பாத்திரத்தை. கட்டியுளப் பத்தினியாள் மீதுனது
ஆத்திரத்தைக் காட்டி அடங்கு.
**
டிசம்பர் 1 சர்வதேச எயிட்ஸ் தினத்திற்காக,,
**
மெய்யன் நடராஜ்