என் மகனுக்கான பிறந்தநாள் வாழ்த்து

பனிமலர் சிரிப்பொடு பழகிய தமிழுடு
.பகலவ னெனவெழு; படரிரு ளழித்திடு
தனித்துவ மெனவிரு; தகுதிகள் வளர்த்திடு;
. தரணியிற் சிறந்திட தரமுயர் வடைந்திடு;
கனிந்ததும் சுவைதரு காயென முதிர்ந்திடு;
.கனிவுள மதனுயர் கருணையை நிரப்பிடு.
மனிதரு ளுறைந்துள மடமைக ளழித்திடு;
.மனுக்குலத் துயர்க்கொரு மருந்தென பிணிதடு.
*
வழிகளில் தடையென வருவதை யுடைத்தெறி;
.வறுமையி லுழல்கிற வயதினர் வலியறி;
விழிவழி மழைத்துளி வழிகிற விதியினுள்
.விழுந்தவர் துயரதை விரைவுடன் துடைத்தெறி;
இழிகுண மொடுவுனை இகழ்பவ ரெதிரினில்
.இருப்பது தவறென இதமுடன் விலகிடு;
எழிலுட னிருந்துன தெதிர்ப்புக ளனைத்தையும்
.எதிரிடுந் துணிவொடு இயங்கிடப் பழகிடு
**
இளமையின் வனந்தனி லிழைகிற வுனக்கென
.இகந்தரு மறிவொடு இயங்கிட முடிவெடு
உளமதில் தினசரி உயர்வுற வழிவகை
.உதிர்த்தவ ரருளிய வுயரிய கதைபடி
வளமொடு நடையிட வழிதனை சமைத்ததில்
.வாழ்க்கையின் தடந்தனை வடிவுடன் பதித்திடு
அளவுகள் கடந்தொரு அன்பினை பொழிவதில்
.அன்னைதெ ராசா வழிநடந் துயர்ந்திடு
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jan-20, 4:40 pm)
பார்வை : 289

மேலே