தனிமை பெருமூச்சு

பூக்களோடு சேர்ந்து
புன்னகைக்க
கற்றுக்கொண்டு இருக்கிறேன்
அமைதியாய் பின்தொடருங்கள்

முன் எப்போதும் இல்லாத
உயர் சிந்தனையோடுதான்
ஓவியத்துடன்
உரையாடிக்கொண்டு இருக்கிறேன்
சத்தமில்லாமல் செவிமடுங்கள்

என் மனசாட்சியும்
இதைத்தான் எதிர்பார்க்கிறது
விடியாதவேளை தொடர்கின்ற
மழையில் தானாய் இசை மீட்டும்
வீணையாய் நான் மாறியதை

எனக்குத் தெரியும்
நீண்டு கொண்டிருக்கும்
என் தனிமை தவத்தினை
அவன் உரையாடல் நிச்சயமாய்
கலைத்துவிடும் என்று

என் மென்மையின்
வலிமையை இன்னமும் அவன்
உணராததால்
ஒவ்வொருமுறையும்
தன் ஆண்மையை நினைத்து
பெருமிதம் கொள்கிறான் காமத்தால்
என் காயத்தை காயப்படுத்தியபடி

மீண்டும் பூக்களோடு சேர்ந்து
புன்னகையை தொடர்கிறேன்
தொடரும் வாழ்க்கை
தவத்தின்
ஒரு படிநிலை என்பதால்..........

.........................................மேகலை......

எழுதியவர் : மேகலை (28-Jan-20, 7:30 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 82

மேலே