வண்ணப் பாடல் தமிழ்

வண்ணப் பாடல் ..!!!
*****************************
தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன தனதான (அரையடிக்கு)

அமுத மெனவினிய விளமை யுடனுலகி
லழகு மொழிகளிலை தமிழ்போலே !
அரிய மரபிலத னகல மிமயமென
அடையும் பெருமைகளு முயர்வேதான் !

சமய நெறிகளையு மறிய வுதவுவது
தமிழை விடவுமெது புகல்வீரே !
தகைமை மிகுமொழியின் வளமை நனிபெரிது
சரப மதிலுளமும் நனையாதோ ?

இமிழு மெளிமையுட(ன்) அகர முத(ல்)னகரம்
இசைய வருமொழுகு நதிபோலும் !
இணைய மதிலுலவும் மதுர மணம்பரவும்
இதய மதில்நிறையு மறவோமே !

நமது தமிழமுதை மனமும் பருகியெழ
நலிவு சிறிதுமற விருகாவல் !
நலமும் வளம்பெருகும் புவியி லரசுசெயும்
நனவு நடவுமினி அறிவாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 1:28 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 30

மேலே