நீயும் மரணிப்பாய்
நீயும் மரணிப்பாய்
உயிர்க் காத்து
உயிர்க் கொடுத்தவனுக்கு
மயானம் தர மறுக்கிறாய்
பாரபட்சமின்றி
பரவும் நுண்ணுயிர்
கண்ணுக்குத்
தெரியாத எமன்
எதிர்த்துப் போரிட்டு
இறந்தவனை
எரிக்கக் கூடாதென்று
வெகுண்டெழுகிறாய்
தன்வீடு தன்மக்கள்
தன்னலம் பாராமல்
இன்னுயிரை ஈந்தவனுக்கு
இடுகாட்டில் கூட
இடம்தர மறுக்கிறாய்
உயிர் பயமின்றி
மருத்துவம் பார்த்து
மரித்துப் போனவனின்
உடலைக் கண்டு அஞ்சுகிறாய்
உன்னைக் காக்க
ஊரைக் காக்க
உயிர்த் துறந்தவனின்
உடலைக் கூட
அவமானப்படுத்துகிறார்
உன்னைப் பார்த்து
அறக்கடவுளே
அவமானப் படுகிறது
நீயும் மரணிப்பாய்
அப்பொழுதுஉன் உடல்
புதைக்கப்பட்டதா? எரிக்கப்பட்டதா?
பிணந்தின்னிக் கழுகுகளால்
சிதைக்கப்பட்டதா?
வெறி நாய்களால்
குதறப்பட்டதா?
என்று யாரிடம்
சென்று கேட்பாய்?