கோடை மழை
சித்திரை பிறந்த வேளையிலே...
வெம்மை மிகுந்தது ஆதவன் கதிர்களிலே...
காதலுடன் கதிரவன் பூமி மீது படர படர...
சூடு தாங்காமல் பூமி மிரள மிரள...
வேண்டியது பூமி வானத்திடம் மனமுருகி...
சூடுதனை தணிப்பாய் வானமே மனமிளகி!!
பூமியின் வேண்டுதலால் வானம் இரங்கி...
மறைத்தான் ஆதவனை மேககூட்டத்தை வழங்கி!!!
கார்முகில் கூட்டம் கரைய கரைய...
பெய்தது கோடைமழை சூடும் குறைய குறைய..
முத்தமிட்டது மழைத்துளி பூமிதனை இதமாய்...
பதில் தந்தது பூமியும் மண்வாசனையை ஏகாந்தமாய்!!!
மரங்களும் செடிகளும் உன் அழகை ரசிக்கும்...
குருவிகளும் மைனாக்களும் குட்டைகளில் ஆர்ப்பரிக்கும்...
மலர்களும் மகிழ்ந்து மழைதனில் நனையும்...
காற்றும் குணம் மாறி வாடையாய் குளிரும்!!!
உன்னுள் நனைந்தேன் என்னை இழந்தேன்..
நாணம் நழுவிட குழந்தையாகி வியந்தேன்..
கோடை மழையே !சுவடு தெரியாமல் மறைகிறாய்..
எப்போது வருவாய் எனும் ஏக்கத்தை விட்டு செல்கிறாய்!!!