358 சிறிய உயிர்கள் உணர்த்தியும் துயில் எழாதவர்க்கு சிறப்பென்ன – நெடுந்துயில் 1

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் மா விளம்)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)

விடியலிற் பறவை மிருகம்யா வுமேமுன்
..விரைந்தெழுந் துபல வினைசெயுங்
கடிமலர்ப் பொழில்கண் மலருமார் வமொடு
..கடலெழுந் துகரை தாவிடும்
படியின்மன் னுயிரெ லாமெழுந் துதொழில்
..பலவியற் றிடவெ ழாமலே
தடியெனத் துயிலு வோனரன் கொலொரு
..தாவரங் கொலறி யேமரோ. 1

– நெடுந்துயில்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பகல் விடியும் அதிகாலைப் பொழுதில் பறவைகள் விலங்குகள் யாவும் முன்னரே வேகமாக எழுந்து வழக்கமான தங்களது பல செயல்களைச் செய்கின் றன. வாசம் மிகுந்த மலர்கள் உடைய சோலையும் கண் மலர்ந்து விழித்துக் கொள்ளும். ஆர்வமுடன் கடலும் எழுந்து அலைகளால் கரையைத் தாண்டி மோதுகின்றது.

இன்னும் உலகில் நிலைபெற்ற பிற உயிர்களெல் லாம் எழுந்து தத்தம் தொழிலைச் செய்கின்றன. ஆனால், விரைவில் எழுந்திருக்காமல் மரக்கட்டை போன்று தூங்குகின்றவன் மனிதன்தானா அல்லது மரமா என்று அறிய முடியவில்லையே!” என்று வைகறையில் துயில் எழாதவர்க்கு சிறப்பில்லை என்கிறார் இப்பாடலாசிரியர்.

விடியல் - வைகறை, அதிகாலை. கடி - மணம். தாவிடும் - மோதும். படி - உலகம். தடி - மரக்கட்டை. தாவரம் - வேருள்ளது; மரம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-20, 8:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே