மாதுளை மலராள்
மாதுளை மலராள்
மார்கழிக் குளிரில் மாதுளை
உடல் நடுநடுங்கக் குளித்து
கூந்தல் விரித்துச் சொட்டும்
நீர்த்துளிகளோடு ஈரத்
துணிக்குள் அழகிய உடலைப்
புகுத்தி புத்தம்புது மலர் அவள்
அழகிய வெண்புறாவாய்
ஆற்றோரம் நடந்து வந்தாள்
பாதக்கொலுசுகள் இரண்டும்
சிறிதாய் நாதஸ்வரம் வாசிக்க
நெற்றியில் விழுந்த தலைமுடியை
சற்றே விரல்களால் தள்ளிவிட்டு
கை வளையல் ஒலியோ காற்றோடு
முத்தமிட சந்தன நிறத்தழகி
சத்தமின்றி நடந்து வந்தாள்
சங்கீதமாகவே மிதந்து வந்தாள்
வெட்டிய மாம்பழமாய் உதடிருக்க
பட்டுதெறித்த குங்குமமாய் கன்னமிருக்க
கருத்த நாவல் பழத்தை சொருகிவைத்த
கண்களோடு வெண்சங்கை கழுத்தெனக் கொண்ட
அவள் மூக்கின் நுனி ஊசியை முன்னிறுத்தும்
பேசும் பேச்செல்லாம் தேசிய கீதம்தான்
வேல்விழியாள் நடையழகு சிங்காரமான
சொர்ண எழில் சிற்பம்தான்
சிரிப்புக்கிடையே அவள் தரும் சிறு சிறு
சிணுங்கல்கள் சிந்துபைரவியாகத் தான்
தினம் தினம் என் செவிகளில் ஒலிக்கும்
தோழியரோடு அவள் செலவழிக்கும் நிமிடங்கள்
சாகாவரம் பெற்ற சரித்திரத்தின் சுவடுகள்
பெயரளவில் நான் ஏனோ முறைமாமன்
என்னைக் கண்டாலே அவளுக்கு தடுமாற்றம்
இது தினம் தினம் எனக்குப் பெரும் ஏமாற்றம்
விண்ணை முட்டும் பல எண்ணங்களை
கட்டித் தங்கமென மூடிப் பத்திரமாக
வைத்திருக்கின்றேன் அவள் கன்னத்தில்
முத்தமிடும் நாளுக்காய் காத்திருக்கின்றேன்
தொடுவானமாகத் தான்
அவள் என் கண்களுக்குத் தெரிகின்றாள்
அவளை என்று மணம் புரிவேனோ
அவள் நாயகனாகவே அவளுடன் அவனியில் வலம் வருவேனா ?