நள்ளிரவு நடைப்பயணம்

நள்ளிரவு நடைப்பயணம் ( Midnight misadventure)
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தான் எடுக்கப் போகும் ஒரு திகில் காட்சியை பாலையாவிடம் விவரிக்கும் காட்சியை அப்படம் பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
(நான் கூறப்போகும் சம்பவத்தின்போது இந்தப்படம் வெளிவரவில்லை. பல வருடங்கள் கழித்தே வெளி வந்தது).
அப்படிப்பட்ட திகில் நிகழ்ச்சி சிலர் வாழ்க்கையிலும் சம்பவித்திருக்கலாம். என் வாழ்வில் அதுபோல் நடந்த ஒரு உண்மைத் திகில் சம்பவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி (!) கொள்கிறேன்
ஆண்டு 1951
எங்கள் நெருங்கிய உறவுப்பெண்ணுக்கு தில்லஸ்தானத்தில் திருமணம் நடக்க இருந்தது. எங்கள் ஊரில் 25 குடும்பங்களைச் சேர்ந்த மிக நெருக்கமான உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள, ஒருதனிபஸ் அமர்த்தப்பட்டது. அன்றைய நிலையில் எங்கள் ஊரான அரியலூரிலிருந்து தில்லஸ்தானம் செல்லவேண்டுமென்றால் ஒன்று நாங்கள் அரியலூரிலிருந்து திருமானூர் வரை பஸ்ஸில் சென்று அங்கிருந்து கொள்ளிடத்தை ஒரு பரிசலில் கடந்து, அங்கிருந்து பஸ்ஸைப்பிடித்து அல்லது நடந்து திருவையார் வழியாக தில்லஸ்தானம் செல்லவேண்டும். அல்லது
திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு வழியாகத்தான் செல்லவேண்டும். இன்றுபோல் அன்று கொள்ளிடத்தில் பாலம் கிடையாது.

இந்தக்கல்யாண சமயத்தில் அரியலூர்- திருமானூர் நேரடி பஸ் ஸ்டிரைக். கரி பஸ்தான். அதன் இஞ்சினில் காபிக்கொட்டையை கையால் அறைக்கும் மெஷின்போல ஒரு குழாயைப் பொருத்தி அது வண்டி ஸ்டார்ட் ஆகும் வரையில் சுற்றுவார்கள். பல சமயங்களில் சென்னையில் நடப்பது போல் பஸ்களை பயணிகள் தள்ள வேண்டி வரும். TST என்ற வண்டியை நாங்கள் Thaள்ளுங்க Sir Thaள்ளுங்க என்று வேடிக்கையாகக் கூறுவோம். ஒரு நாளைக்கு எங்கள் ஊரிலிருந்து திருமானூருக்கு இரண்டு பஸ்கள்தான். அந்த பஸ் அன்று ஸ்டிரைக்.
எனவே நாங்கள் தனி பஸ்ஸில் திருச்சி சென்று அங்கிருந்து ரயில் பிடித்து தஞ்சாவூர் போய், அவுட் ஏஜன்சி பஸ் பிடித்து திருவையாறு சென்று அங்கு மாட்டு வண்டியோ இல்லை குதிரை வண்டி பிடித்தோ அல்லது நடையாகவோ தில்லஸ்தானம் செல்ல வேண்டியதாயிற்று. எங்கள்பஸ் திருச்சி ஜங்ஷனை அடைந்தபோது எங்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் அந்த 8:00 மணி ரயிலை தவற விட்டோம்..

அடுத்த ரயில் விடியற்காலை 3:30 மணிக்கு. நாங்கள் எங்களோடு ஏகப்பட்ட கல்யாண சாமான்களையும் எங்கள் மூட்டை முடிச்சுகளையும் வைத்து அதை திருச்சி ஜங்ஷனில் காபந்து செய்து இரவு பூராவும் கொட்டக்கொட்ட கண்விழித்து 3:30 ரயிலைப் பிடித்து ஒரு வழியாக தஞ்சாவூர் வந்து அவுட் ஏஜன்சி பஸ் பிடித்து திருவையாறு வந்து அங்கிருந்து நாங்கள் இருவரும் ( நானும்- வயது 15, - என் உறவினனும், என்பக்கத்து வீட்டுக்காரனும், என் மிக நெருங்கிய நண்பனுமான சுப்பிரமணியனும் - சுருக்கமாக சுப்புவும், வயது 17) நடையாகவும் மற்ற பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் வண்டியிலுமாக தில்லஸ்தானத்திற்குப் போய்ச்சேர்ந்தோம்.

அன்று முகூர்த்தம் முடிந்தவுடன் நானும், சுப்புவும் திருவையாற்றைப் பார்க்கும் ஆவலில் நடந்து சென்று ஊரை சுற்றிப்பார்த்து தியாகராஜஸ்வாமிகளின் ஆராதனை நடக்கும் இடங்களையும் கோவிலையும்பார்த்து விட்டு காவிரிக் கரையில்உள்ள மாமரத்தில் கல்லை விட்டெறிந்து மாங்காய் பறித்து சாப்பிட்டு ஒரு மூன்று மணி அளவில் தில்லஸ்தானம் திரும்பினோம்.
எங்கள் ஊர்ப் பெரியவர்கள் பலரும் என்னையும் என் நண்பன் சுப்புவையுமே திரும்பத்திரும்ப வேலை வாங்கிக்கொண்டிருந்ததால் நாங்கள் இருவரும் கடுப்பாகி திருமணவீட்டில் தங்குவதற்கு விருப்பமில்லாமல் அங்கிருந்து எங்கள் ஊருக்கே திரும்பப் போகத் தீர்மானித்தோம். நான் என் அப்பாவிடம் எங்கள் முடிவைச் சொன்னேன். என் அப்பாவும் “என்னடா அவசரம், எங்களோடு நாளை காலை புறப்படலாமே. பஸ்கூட இருக்காதே” என்றார்.
“பஸ் ஸ்டிரைக் வாபஸ் ஆகிவிட்டது” என்று ஒரு பொய்யைச்சொல்லி சுப்புவும் நானும் புறப்பட இருந்தோம்.
என்அப்பா, “அப்படியா சரி” என்று சொல்லி ஒரு சில்லறை நிறைந்த ஒரு மடிசஞ்சிப்பையை என்னிடம் கொடுத்து அதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்.
பெர்மிஷன் கிடைத்த சந்தோஷத்தில் நாங்கள் இருவரும் அங்கிருந்து நாலரை மணிக்குப் புறப்பட்டு திருவையாறு வழியாக விளாங்குடி வந்து சேரும்போது நேரம் ஆறு. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு பரிசல்கிடைத்து அக்கரை திருமானூரை அடையும்போது மணி ஆறரை.

அங்கு கரையிலுள்ள பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பேர் இருந்தனர். விசாரித்த போது இரண்டு நாட்களாக பஸ்ஸே இல்லை என்றும் பலர் மணிக்கணக்காக பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் சொன்னார்கள். நான் என் அப்பாவிடம் பஸ் ஸ்டிரைக் முடிந்துவிட்டது என்று பொய் சொல்லி பெர்மிஷன் வாங்கினேன். விடிவதற்குள் அரியலூர் போய்ச்சேரவில்லை என்றால் எங்கள் வண்டவாளம் தெரிந்துவிடும். செமையாகத் திட்டு விழும்.

எனவே நானும் சுப்புவும் என்ன செய்வறியாது இருந்த போது அங்கு ஒரு சிலர் அவர்களின் ஊருக்கு நடந்தே போகத் தீர்மானித்தார்கள். அவர்களுடன் கூடவே நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருவருமே நடைக்கு அஞ்சாதவர்கள். வேக வேகமாக நடந்தோம். உத்தேசமாக ஒன்றரை மைல் நடந்து இருப்போம். திடீரென்று எங்களுக்கு முன்னால் நடந்து சென்றவர்களைக் காணவில்லை. எங்கே போனார்கள், எப்படிப்போனார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் புறப்பட்டுவிட்டோம், பின் வாங்கக்கூடாது என்று நடந்தபடி இருந்தோம்.

இருட்டோ இருட்டு கும்மிருட்டு. சாலையின் இருபுறமும் அடர்ந்த புளிய மரங்கள்.
முதல்நாளிரவு தூக்கமில்லை. கல்யாணத்தன்று திருவையாற்றை சுற்றியது, பிறகு தில்லஸ்தானம் போய் மறுபடியும் திருவையாறு வந்து அங்கிருந்து விளாங்குடி வரை நடந்ததே சுமார் ஆறேழு மைல் சுற்றியது இதெல்லாம் என்னை மிகவும் களைப்படையச்செய்தது. தூக்கமோ கண்ணைச் சுழட்டுகிறது.
“சுப்பு, இங்கேயே இப்படியே ரோடு ஓரமாகப்படுத்துத் தூங்கி விடலாமா?” என்றேன்.
“பைத்தியக்காரத்தனமா உளறாதே. இங்கு இவ்வளவு இருட்டில் என்னென்ன பூச்சி புட்டுகள் இருக்குமோ? என்றான்.
“திரும்பி திருமானூர் பஸ் ஸ்டாப்புக்கே போய்விடலாமா? என்றேன் நான்.
“ ஏற்கனவே நிறைய தூரம் நடந்து வந்து விட்டோம். திரும்பிப்போவது சரியாக இருக்காது. இப்படியே இன்னும் கொஞ்சம் நடந்தா ஏதாவது ஒரு கிராமம் தென்படலாம். அங்கே வேணாலும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போவோம்” என்றான்.
“சரி” என்றேன்.
நடக்க ஆரம்பித்தோம். எங்கும் இருட்டு, இருட்டு கும்மிருட்டு இதைத் தவிர வேறு எதுவுமில்லை. அவ்வப்போது மரங்களின் கிளைகள் அசைவதால் ஏற்படும் சலசலப்பு அந்த இருளைக்கிழித்தபடி எங்கள் திகிலை அதிகமாக்கியது. எங்களுக்குப் பேய் மீது நம்பிக்கை இல்லாத போதும், அந்த நேரத்தில், அந்த இருட்டில் தேவை இல்லாது பேய்க்கதைகள் ஞாபகம் வர ஆரம்பித்தன. அங்குள்ள புளிய மரங்கள் எங்கள் பேய்ப் பயத்தை அதிகப்படுத்தின. இது தவிர எங்களுக்குப் பழக்கமில்லாத கிரீச், கிரீச் என்ற கூச்சல்கள் எங்கள் சப்த நாடியையும் ஒடுங்க வைத்தன. அந்த இருட்டில் அந்த நேரத்தில் மயான அமைதிக்கு நடுவே இம்மாதிரி அமானுஷ்ய சத்தங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன். இது போதாதென்று நான் வைத்திருந்ந சில்லரை மூட்டை அவ்வப்போது சல சலவென்று குலுங்க எங்களுக்கு ஒரே திகில். அப்பொழுதுதான் நாங்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு படித்த சில செய்திகள் நினைவுக்கு வந்தன. ஆம். அதே ரோடில் நடந்த ஒரு பயங்கரக்கொலை. எதை நினைவு படுத்திக் கொள்ளக்கூடாது என்று நினைத்தோமோ அவை எல்லாம் நினைவுக்கு வந்து எங்களை மேலும் பயமுறுத்தின. இது போதாதென்று ஓரிடத்தில் ஒரு கிளைப்பாதை ஒன்று பிரிந்து சென்றது. அதைப்பார்த்ததும் எங்களுக்குப் பகீர் என்றது. எந்தப்பாதையில் செல்வது? அது சற்றுக் குறுகலாக இருக்கவே, பஸ் செல்லும்பாதையாக அது இருக்காது என்று நாங்களே தீர்மானித்து அகல பாதையில் நடந்தோம்.
நடந்தோம். நடந்தோம். நடந்துகொண்டே இருந்தோம். ( பராசக்தி படம் அப்போது வெளியாகவில்லை. ஆனாலும் வாழ்க்கையின் ஓரத்திற்கே நடந்து வந்து விட்டதாக ஒரு உணர்ச்சி)
அப்பொழுது தொலைவில் விளக்குகளின் வெளிச்சம் தெரியவே அந்த விளக்கை நோக்கி அந்தப் பாதையில் நடந்தோம். அந்த ஊரை அடைந்து அங்கே தங்கிவிட்டு எங்கள் ஊர்ப்போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. எங்கள் நடையை நம்பிக்கையுடன் தொடர்ந்தோம். ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம். அந்த விளக்குகள் எரியும் ஊர் வருவதாக இல்லை.
அப்படி நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டபடி எங்கள் பயத்தை சுமந்துகொண்டு நடந்தோம். எங்கள் இதயம் ஒருவர்கொருவர் கேட்கும்படி பட படவென்று அடித்துக் கொண்டிருந்தது. சுப்புவின் இதயத்துடிப்பை நானும், என் இதயத்துடிப்பை அவனும் உணர முடிந்தது.
அப்பொழுதுதான் அந்தக் கும்மிருட்டில் “ டேய் பசங்களா” என்ற குரல் கேட்டது. அவ்வளவுதான். அப்படி ஒரு அதட்டலான கனமான குரலைக் கேட்ட மாத்திரத்தில் எங்கள் இருவர் இதயமும், ஏன், வயிறும் கூட வாய் வழியாக வந்துவிடும் போலாயிற்று. சிறுவர்களாக இருந்த படியால்ஹார்ட் அட்டாக் வராமல் தப்பினோம். குலை நடுங்கியபடி, எங்களையும் மீறிய பயம் நடுக்கம் இவற்றுடன் அக்குரல் வந்த திசையை நோக்கி சென்றோம்.
“அவர்கள் திருடர்களா, கொலைகாரர்களா, தெரியவில்லையே. யாராயிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்ப முடியாது. என்னிடம் இருந்த சில்லரைப் பையைப் பிடுங்கிக் கொள்ளலாம். அவர்கள் எதிர்பார்த்த அளவு பணம் இல்லை என்றால் எங்களைக் கொன்று கூட போட்டாலும் போடலாம்.நடப்பது நடக்கட்டும்” என்று நேராக குரல் வந்த திசையை நோக்கி நடந்தோம்.
அங்கிருந்த ஒரு சிறு மதிற்சுவரில் இருவர் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு மாட்டின் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். நாங்கள் நேராக அவர்களிடம் சென்று நாத்தழுதழுக்க, கண்களில் நீர் மல்க அவர்கள் எதுவும் கேட்காமலே எங்கள் சோகக் கதையை ஆதியோடு அந்தமாக (அரியலூரிலிருந்து புறப்பட்டு தில்லஸ்தானம் வந்து அதற்குப் பிறகு இதுவரையில் நடந்த எங்கள் கதையை ஒன்று விடாமல் ) ஒப்பிக்க ஆரம்பித்தோம்.
“ பாத்தா, ஐயர் வீட்டுப் பசங்களா இருக்கீங்க. இந்த இருட்டிலே இந்த ரோடுலே முன்னே பின்னே பழக்கமான நாங்களே வர பயப்படுவோம். நீங்க எந்தத் தைரியத்துலே இப்படி வந்தீங்க?” என்றார் ஒருவர்.
அதைக்கேட்டவுடன் போன உயிர் பாதி திரும்ப வந்தது. நல்ல வேளையாக இவர்கள் கொள்ளையர்கள் இல்லை. நல்ல மனிதர்கள் போல இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்பொழுது ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே அது ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று.
“சரி. நாங்களும் மாட்டை ஓட்டிக் கிட்டு அரியலூர் சந்தைக்குப்போறோம். எங்களோடே வாங்க. அரியலூருக்கு இன்னும் நிறைய நடக்கணும். நீங்க ரெண்டு பேரும் பாதி வழியிலேயே பழுவூரில் தங்கிக்குங்க. அங்கே திருச்சியிலிருந்து வர முதல் பஸ்ஸிலே ஏறி அரியலூருக்குக் காத்தாலே ஆறு மணிக்குள்ளே போயிடலாம்” என்றார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தெய்வமே அனுப்பிய தேவதூதர்களாக எங்கள் கண்ணில் தெரிந்தார்கள்.
அதற்குள் நான் “ அதோ அங்கே தூரத்துலே விளக்கு வெளிச்சம் தெரியுதே. பழுவூருக்கு முன்னாடி அங்கே போய் நாங்க தங்கிக்கிறோமே” என்றேன்.
“அதுவா தம்பி. அது டால்மியாபுரம், இங்கிருந்து 12 மைல். பழுவூர் இங்கிருந்து 5 மைல்தான்” என்றார்.
“அப்படியா, சரி” என்று அவர்களைப் பின் தொடர்ந்தோம். அவர்களும் அந்த பாதையில் நடந்த கொலைகள், கொள்ளைகளைப் பற்றி விலாவாரியகச் சொல்லிக்கொண்டு வந்தனர். அவ்வப்போது “எந்த தைரியத்துலை பழக்கமில்லாத பாதையிலே நட்ட நடு ராத்திரியிலே விவரம் தெரியாத ரெண்டு சின்னப்பசங்க இப்படி வந்தீங்க?. ஏதோ நாங்க வந்தோமோ நீங்க தப்பிச்சீங்க. வேறே யார் கிட்டேயாவது மாட்டியிருந்தீங்கன்னா... “ என்று சொல்லும்போதே அந்த வேறே யாரோ ஒருவர் என் கழுத்தைப் பிசைந்து கொல்வது போல் இருந்தது.
கொஞ்ச நேரத்தில் பழுவூர் வந்தது. அங்கே பஸ் நிற்கும் இடத்திற்குப்பக்கத்தில் நடு ரோட்டில் ஒரு பெரிய மரம், ஆலமரமா என்ன என்று தெரியவில்லை. அதைச்சுற்றி ஒரு பெரிய பிளாட்பார்ம். ( இன்றும் இருக்கிறது என்று நினைக்கிறேன்)
“இந்த மேடையிலே படுத்துக்கிட்டு நாளைக்குக் காத்தாலே பஸ்ஸைப் பிடிச்சிப் போங்க” என்று எங்களிடம் விடை பெற்றுச்சென்றனர்.
நாங்கள் இருவரும் அவர்களுக்கு நன்றி சொல்லி என் சில்லறைப்பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்க
“ தம்பி, அதெல்லாம் வேணாம். இனிமேலும் இந்தமாதிரி ( அவர்களின் அன்றைய கணக்குப்படி நாங்கள் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முட்டாள்தனமாக என்று கூறாமல்) அசால்டான வேலையைச் செய்யாதீங்க” என்று அறிவுரை சொல்லிவிட்டு அந்தமாடுகளின் காலில் கட்டிய கொலுசு ஜல் ஜல்லென்று ஒலிக்க மாடுகளுடன் அரியலூரை நோக்கி நடையைக் கட்டினர்.
நங்கள் இருவரும் அந்தப் பிளாட்பாரத்தில் படுத்தோம். ஆனால் என் மடியின் சில்லறைப்பைக் கனத்தால் என்னால் தூங்கமுடியவில்லை. மடியிலே கனமிருந்தா வழியிலே பயம் என்ற பழமொழியின் முழு அர்த்தத்தையும் அன்று புரிந்து கொண்டேன்.
அப்போது மணி மூன்று இருக்கும் என்று நினைக்கிறேன் ( எங்கள் இருவரிடமும் ரிஸ்ட் வாட்ச் கிடையாது அது அந்தக்காலமாதலால்). ஐந்தரை வரை ஒரு மாதிரி சமாளித்து திருச்சியிலிருந்து வந்த அந்த முதல் பஸ்ஸைப் பிடித்து அரியலூர் போய்ச் சேர்ந்தோம். அங்கு கல்யாணத்திற்கு வராத ஒரு சில வயதான சொந்தக்காரர்கள்
“என்னடா நீங்க ரெண்டு பேர் மாத்திரம் வந்திருக்கீங்க. பாக்கி பேர் எல்லாம் எப்ப வராங்க?” என்று கேட்க
“அவர்கள் மத்தியானம் புக் பண்ணின பஸ்ஸிலே வருவார்கள்” என்று ஒருவாராகச் சமாளித்தோம். நடந்த உண்மையைச் சொன்னால் எங்களைத் திட்டித் தீர்ப்பார்கள் என்ற பயத்தால் அதை சொல்லவில்லை.
வெகு வருடங்களுக்குப் பிறகு எங்களின் இந்த midnight misadventure ஐப் பற்றி நான் சொல்லும்போது இந்த நிகழ்ச்சியை அனேகமாக பலரும் மறந்து போயிருந்தனர்.அதில் சம்பந்தப்பட்ட பல பெரியவர்களும் இறந்து போயிருந்தனர்.
இதை உங்களுக்குச் சொல்லும் இந்த நேரத்தில் அந்தத் திருமணப்பெண், மாப்பிள்ளை, அக்கல்யாணத்தில் பங்கெடுத்த பலரும் இல்லை. ஏன்? என்னுடன் இந்த தீரச்செயலில் ஈடுபட்டிருந்த சுப்புவும் இன்று உயிரோடு இல்லை.

எழுதியவர் : ரா.குருசுவாமி (ராகு) (23-May-20, 10:17 pm)
பார்வை : 1423

மேலே