காவல் அய்யனார் - வேண்டுதல்
எள்ளு வய காவ காக்கும் எங்க ஊரு அய்யனாரே..
வீடு வரைக்கும் போயி வாரேன் வெளஞ்ச காட்டை பாத்துக்கங்க..
தானியம் எடுத்துப் போக மஞ்சக் குருவி ரெண்டு வரும்,
வெரட்டி விட்டுராதீக..
மூலப் பனைமரத்துல, அதுக மூணு குஞ்சு பொருச்சிருக்கு..
கருத்த பசுவொன்னு கன்னோட வரும்,
பத்தி அனுப்பிராதீக பாவம் தண்ணி குடிச்சிக்கிடட்டும்..
ஒத்தையில விட்டுப் போறேன்னு ஒண்ணும் நெனச்சுக்காம, சிட்டுக்குருவிக சிறகசைக்கிறதையும்,
வரப்புத் தோட்டுல வயநண்டு எட்டிப் பாக்குறதையும்,
வேடிக்கைப் பாத்துருங்க வெரசா வந்துருவேன்..!