உள்ளத்தின் உணர்வுகள்

----------------------------------------

வாழ்வெனும் புத்தகத்தின்
வண்ணமிகு பக்கங்கள்
வசந்தகால தருணங்கள் !

சுகம்தரும் சோலையின்
மணம்வீசும் மலர்கள்
நேயமுள்ள நெஞ்சங்கள் !

வாஞ்சைமிகு வருடலின்
விளிம்பற்ற எல்லைகள்
அன்பான தீண்டல்கள் !

குளிர்ந்திடும் சிந்தையின்
குறுகியநேர சிலிர்ப்புகள்
இன்பம்தந்த நொடிகள் !

சீறியெழும் உள்ளமதின்
சிவந்திடும் நேரங்கள்
பொங்கிடும் கோபங்கள் !

வீரம்நிறைந்த நெஞ்சின்
விம்மியழும் பொழுதுகள்
விரும்பாத நிகழ்வுகள் !

பாசமிகு உள்ளத்தின்
பரிவுமிகு நேரங்கள்
பண்புமிகு செயல்கள் !

நற்குண நெஞ்சத்தின்
நறுமண உணர்வுகள்
நன்றியின் வெளிப்பாடு !

பேராசை உள்ளத்தின்
பேராபத்து நேரங்கள்
பதவிவெறி துடிப்புகள் !

இரக்கமிகு இதயத்தின்
இன்பமிகு நொடிகள்
இல்லார்க்கு உதவுதல் !

நேர்மைமிகு மனதின்
நேரலைக் காட்சிகள்
ஊழலற்ற சேவைகள் !

வாழ்க்கைப் பயணத்தின்
வருந்திடும் மணித்துளிகள்
அறிந்தவர்கள் மரணித்தல் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Jun-20, 9:52 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 449

மேலே