இயற்கையின் சீற்றம்

------------------------------------
உயிர்வாழ உனக்களித்த
காற்று மாசுபடுவதும்
மனிதா உன்னால் தானே ?

பொழிகின்ற மழைநீரை
சேமிக்காமல் என்மீது
பழிசுமத்துவது நீதானே ?

சீர்செய்யாது சீரழித்து
தூர்வாராது ஏரிகுளங்களை
நிலமாக்கியது நீதானே ?

அணைக்கட்டி ஆழப்படுத்தி
நீர்நிலைகள் உருவாக்காமல்
மாடிகளாய் மாற்றுவது நீதானே ?

நிழல்தந்து உயிரனங்களின்
உள்ளத்தைக் குளிர்விக்கும்
மரங்களை வெட்டுவது நீதானே?

நீவாழ்ந்திட யாமளித்த
கணிமங்களைக் களவாடி
அழிக்கும் கல்நெஞ்சன் நீதானே ?

மலைகளும் காடுகளும்
மண்ணாகிப் போனதுஉன்
மதிகெட்ட செயலால் தானே ?

இயற்கையின் கொடையை
இதயமின்றி அழித்தால்
இனி வாழவும் வழியேது ?

நிந்திப்பாய் சிந்திக்காமல்
நித்தமொரு அறிவுரைகூற
நீயாரென என்னை நிச்சயம் !

நானெழுதும் வரிகள்
நானிலம் வாழ்ந்திடவே
நாளைய தலைமுறை
நாளும் மகிழ்ந்திடவே !

பொதுநலம் என்சிந்தனை
பொழுதும் என்நெஞ்சினில்
மொழிவதும் என்கடமை
மெய்யிதுவும் உரைப்பது !

இயற்கையை அழிப்பது
இன்னலை வரவழைப்பது
இணைந்துக் காப்பது
இன்பமுடன் வாழ்வதற்கு !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Jul-20, 1:18 pm)
பார்வை : 355

மேலே