புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 41---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௧

401. வாழையடி வாழை வளர்ந்து நன்மை தருவது போல்
அவனுக்குப் பின் அவன் வழிதோன்றல் நன்மை தருவதில்லை.

402. விலங்குகள் வதைக்கப் பட்டால் விடை கேட்டு எழுகின்ற பலரும்
மனிதர்கள் வதைக்கப் பட்டால் மௌனத்தின் பின்னால் ஒளிகின்றனர்.

403. குளத்தில் ஒரு தாமரை பூவுக்கு அழகாகும்
குளமெங்கும் தாமரை குளத்துக்கு அழகாகும்
மனிதனின் வாழ்க்கையும் அப்படித்தான்.

404. பிறர்க்கு நன்மை தராமல் வாழும் வாழ்க்கை
துணியில் இணையாத நூல் போன்றாகும்.

405. ஊரையும் உறவையும் பிரிந்து வேறிடம் செல்லும் மனிதர்களின் நிலை
வளர்ந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறிடம் நடுவது போல
உயிர் பிழைப்பது உறுதியில்லை.

406. விழிகள் திறந்தும் வாழ்வில் இருள் சூழ்ந்திருந்தால்
உன் செயல் எனும் வெளிச்சத்தாலே அவ்விருள் விலகும்.

407. வெயிலை நோக்கி வளரும் தாவரம் போல
வெற்றியை நோக்கியே முயற்சியும் வளரும்
தோற்றாலும் முயற்சி பலன்தரும்.

408. ஒரு வேலையை முடிக்காமல் மறு வேலையைத் தொடங்காதே
சேர்த்து வைப்பது எப்போதும் சுமையே.

409. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப செய்த குற்றம் மாறுபடும்
அதனால் தண்டனை அளவு குறையலாம்
இருப்பினும் குற்றம் குற்றமே.

410. வாழ்வில் விதிமுறைகளை மீறுவது எளிது
அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக் கடினம்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (3-Aug-20, 8:04 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 221

மேலே