மந்த மாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும்
நானே ராஜா (25.01.1956) என்ற திரைப்படத்தில் 'வில்லாளன்' என்கிற கதாநாயக, வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதாநாயகியாக ஸ்ரீரஞ்சனியும் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் மதுவருந்திவிட்டு, மாளிகை நிலவொளியில் தள்ளாட்டத்துடன் பாடும் ’மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும்’ என்ற பாடல் ஓர் அருமையான பாடல்.
கவிஞர் கே.பி.காமாட்சிசுந்தரன் இயற்றிய இப்பாடலை, டி.ஆர்.ராமநாத் இசையமைப்பில், டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். கவிஞர் கே.பி. காமாட்சிசுந்தரன் ’பராசக்தி’ திரைப்படத்தில் பூசாரியாக நடித்தவர் எனத் தெரிகிறது.
நான் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தபொழுது, என் வகுப்புத் தோழன் இப்பாடலை மிக அருமையாகப் பாடுவான். பாடல் வரிகளை யு ட்யூபில் கேட்டு, பதிவு செய்திருக்கிறேன். நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.
லாலாலலலா லாலலாலலா லாலலா
மந்தமாருதம் தவழும்
சந்திரன் வானிலே திகழும்
இந்த வேளையே இன்பமே – ஏகாந்தமான
இந்த வேளை...யே இன்பமே
வந்து வந்து வீசும் முல்லை
மனசிற்கேதும் ஈடே இல்லை
செந்தமிழ்ப் பெண்ணைப் போலே
சிரிக்குதே என் தென்னம் பாளை (இந்த வேளையே)
(மந்தமாருதம்)
கண் படைத்த பயனை நானே
கண்டு கொண்டேன் உன்னால் மானே
பெண்ணுருவாய் வந்தென் முன்னே
பேசும் தெய்வம் நீயே கண்ணே
பொன்பொருள் யாவும் துன்பமே - காணும்
பொன்பொருள் யாவும் துன்பமே – உன்னோடு பேசும்
இந்த வேளை...யே இன்பமே
மந்தமாருதம் தவழும்
சந்திரன் வானிலே திகழும்
இந்த வேளையே இன்பமே - உன்னோடு பேசும்
இந்த வேளை...யே இன்பமே
விழித்து என்னைப் பார்ப்பதாலே
விபரம் ஒன்றும் புரிந்தேனில்லை
பழுத்த மாம்பழத்தைக் கண்டும்
பசித்தவன் காத்திருப்பதில்லை
கருத்தைக் கொள்ளை
கொண்டாய் வாழ்விலே – எந்தன்
கருத்தைக் கொள்ளை
கொண்டாய் வாழ்விலே - உன்னோடு பேசும்
இந்த வேளை..யே இன்பமே (மந்தமாருதம்)
உண்மை, மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும் வேளை, வில்லாளனுக்கு மட்டுமல்ல, அனைவர்க்குமே இன்பமானதுதான்.