சாக்கடையின் கேள்வி
---------------------
நின்றும் ஓடியும்..
ஓடியும் ஓடாமலும்..
தெளிந்தும் தெளியாமலும்..
வீட்டு கழிவுகளை தினம் ஏந்தி..
கெட்ட வாடை அதனுடன் தாங்கி..
அநேக தெருவோரமாய் ஓடும்.
ஆனால் பெயர் சொல்ல கேட்டு
மனித முகம் சுளிக்க வைக்கும்..
என் போக்கை கெடுத்தது யார்?
வண்ணமாய் நெகிழி பைகள்..
சிறிதும் பெரிதுமாய் நெகிழி புட்டிகள்..
ஒதுங்கி ஓரமாய் வழலை நுரைகள்..
தட்டில் தப்பிய சோற்று பருக்கைகள்..
உடன் சேர்ந்த காய் கறிவேப்பிலைகள்..
மழை நீர் தள்ளிய மணல் துகள்கள்..
மரக்கிளைகள் உதிர்த்த காய்ந்த சருகுகள்..
மக்கிய கழிவுகளுடன் மனித கழிவுகளும்..
மனிதரிட்ட திடப்பொருள் யாவும் ஒரு சேர..
என் சீரான ஓட்டத்தை தடுத்து ஆயினும்
என்னை தினம் திட்டி முகம் சுளித்து
என்னை கடக்கையிலே தன் மூக்கை
இருவிரல் கொண்டு மூடியோடும் மனித இனமே..
மனிதர் தாம் செய்த பாவங்களை கழுவ
நாடும் தூரமிருக்கும் நதிக்கரை ஓடுகிறீர்..
நீர் விட்ட அழுக்குகளை சுமக்கும்
என்னையேன் அப்புனித நதி சேர்த்து
என் பாவம் உன்னுள் சேர்க்கிறீர்?
-----------
சாம்.சரவணன்