இயற்கையின் பேரெழில்
வைகறையில் கீழ்வானம் மெல்ல சிவந்திட
அருணனின் கிரணங்கள் மெதுவாய் படர
காரிருள் போர்த்திய கங்குல் கலைந்து
காதலால் விரிந்தன (சூரிய) காந்தி மலர்கள்!
கதிரவன் கதிர்கள் கொணரும்
கண் கூசும் ஒளிவெள்ளம்
மச்சு வீடென்று மயங்குவதில்லை
குரம்பை என்று மங்குவதில்லை
மது அயிலும் வண்டினம் சுருதிகள் கூட்டிட
அத்தமதில் செல்லும் சகடம் தாளம் போட
ஓய்வறியா உறவிகள் கூடி ரசிகர்களாக
தவழும் தென்றல் நர்த்தனமாடும்
பனி போர்த்திய புல்வெளிகண்டு
பால்வண்ண காழகமெனயெண்ணி
தன் சிற்றிலுக்கு திரைசீலையாக்க
புல்லிடம் விலைபேசும் சிறுமியர்
கவ்வைசொல் அறியா சிறுவர் குழாம்
பட்டாம் பூச்சியை பிடித்திட அசும்பில் கால் புதைக்க
அல்கல் தோன்றும் இயற்கையின் பேரேழிலிது
காணும் கவிஞரின் ஒர்வு அழகு கவிதையானது.