காயும் கனியுமாய் தனித்து
வறண்ட நிலத்திலே வற்றிய
சிறு குட்டையின் கரையில்
ஒற்றை வேறோடு சிறு குச்சிச் செடி
பேருக்காகவேணும் சொட்டு நீரில்லை
பிடியோ வேருக்கும் மண்ணுக்கும்
தளர்ந்து காய்ந்த வேர்க்கடலையாய்
எப்பொழுதாவது தூவும் தூறலால்
எச்சில் விழுங்குவதைப் போல்
பச்சையத்தைக் காக்கும் குச்சிச்செடி
பல்லாண்டு போராட்டத்திற்கு பின்
பச்சைப்பசேல் என்று சிறுமரமாய்
வளரும் போதே எறும்புக்கு இருப்பிடமாய்
அணிலும் குருவியும் இன்ன பிறவும்
அண்டிக் கூடுகட்டி அணுக்கமாய்
ஆசுவாசப்படுத்தியே அமைதியாய்
பருவ மாற்றத்தில் பருவமடைந்த
சிறு குச்சி செடி மா மரமாய்
காயும் கனியுமாய் தனித்து மிளிர
கோட்டான் குரங்கு ஆந்தையென
வளர உதவாத எல்லாம் ஒன்றுக்கூடி
வளத்தை சுவைத்து சிதைத்தே
இல்லறமாய் வாழ்ந்தவைகளுக்கு
இடையூறுகள் பல செய்து இம்சையித்து
வளம் குன்றியதால் இடம்பெயரும் உயிராய்
இந்நூற்றாண்டு மக்களின் நுண்ணிய
எண்ணம் போல் நூதன அரசியல்வாதிகளின்
கொள்கைப்போல் வாழ்க்கை மாறும் இனி .
----- நன்னாடன்.