அப்பாவிற்கு சமர்ப்பணம்

பெற்ற குழந்தைகளின் கல்விக்காக இலட்சியத்துடன் போராடும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம்
அப்பா மூன்றெழுத்தில் ஈன்றெடுத்த முன்நடத்தும் நாயகன்
அவர் கை பிடித்து நடந்த நாட்கள் ஞாபகம் இல்லை
அவரின் கை பிடிக்க நினைக்கும்போதோ அவர் என்னுடன் இல்லை
எனதாசை நிறைவேற்ற அவராசை குறைத்திடுவார்
என் பசிக்கு உணவளிக்க பட்டினியாய் உழைத்திடுவார்
நான் தவறிழைத்த வேளையிலே தள்ளி அடித்திடுவார்
தரை மீது விழுமுன்னே அள்ளி
அணைத்திடுவார்
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது
அவர் அணைத்திட்ட வேளையிலே அதையும் நான் உணர்ந்தேனே
படிப்பறிவு இல்லாமல் பாரினிலே இன்னலுற்றோம்
என்றுணர்ந்த நாளினிலே நன்இலட்சியத்தை விதைத்தாரே
பெற்ற மகன் பள்ளி சென்று பட்டம் பெற வேண்டும் என்று
நித்திரையே இல்லாமல் நிகழ்கனவு கண்டாரே
நான் பள்ளிக்குச் சென்றதாலே
நான் பள்ளிக்குச் சென்றதாலே
என் தாய் அணிந்த சிறுநகையும் சிறைநோக்கி சென்றதடா
பட்டினியில் கிடந்த காலம் பன்மடங்கு உயர்ந்ததடா
வயிறார உண்பதற்கே வழியில்லா நிலையிலேயும்
வண்ண உடை வாங்கி வகுப்பறைக்கு அனுப்பிடுவார்
ஆங்கிலம் பேசச் சொல்லி அளவளாவி நிற்பாரே
கணக்கு போடச் சொல்லி கண் கலங்கிப் போவாரே
கீழ் வகுப்பு முடிப்பதற்கே கிடந்த நிலம் விற்றுவிட்டார்
மேல் வகுப்பு படிக்க வைக்க மேனியையே கொடுத்து விட்டார்
கல்லூரி படிப்பிற்கோ கடன் வாங்கி மேலுழைத்தார்
வட்டி கட்ட முடியாமல் வசை வாங்கி துன்பப்பட்டார்
வசை வாங்கும் நிலையினிலும் இலட்சியத்தை விடவில்லை தன்மானம் பெரிதென்று தற்கொலைக்கும் செல்லவில்லை
எந்நிலையாயினும் எண்ணத்தை மாற்றவில்லை
தன்னிலை மறந்தாலும் தன்மகன் படிப்பை நிறுத்தவில்லை
படிப்பை முடித்திட்டு பட்டத்துடன் வந்த என்னை
கட்டி அணைத்திட்டு கனவினையும் வென்றாரே
பட்ட கடனடைக்க பணிக்கு நான் செல்கையிலே
பாரினையும் வென்று வர பணித்திட்டார் என்னையுமே
பெற்றவனை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு
பெரும்பணி தேடிப் பல இடங்கள் சென்றேனே
பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் வகையினிலே
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியொன்று அமைந்ததடா
நல்லதொரு வேலையிலே நான் சேர்ந்து பணி செய்து
பெற்ற ஊதியத்தை பெற்றவனின் கைகொடுக்க
இல்லம் நோக்கி நான் இசைந்திட்ட வேளையிலே
பெற்ற கடன் முடித்திட்ட பெருமையோடு
பிரிந்திட்டார் தந்தையுமே இவ்வுலகை
அவர் உளமுறுகி உடலுறுகி சேமித்த சொத்தினாலே
வந்த வருமானம் வந்த வருமானம்
அவரை வழியனுப்ப உதவியதே அன்றி
அவரின் வாழ்க்கைக்கு உதவவில்லை
அப்பாவின் வளர்ப்பினிலே அழுது பழக்கமில்லை
உள்மனது அழுததேயன்றி உப்புநீரைக் காணவில்லை
உப்புநீரைக் காணாமல் உற்றார்கள் சொன்னார்கள்
உள்அணையை உடைத்துவிடு உள்ளத்தெல்லாம் கொட்டிவிடு நெஞ்சத்து நினைவையெல்லாம் நிழல் போல இருத்திவிடு
ஆலவிழுதுபோல் வலுவாக வளர்த்த என்னை
உழுது பயிரிட்டு உரமிட்ட உற்றவனுக்கு ஒருவேளை உணவளிக்க முடியாமல் உறைந்து போன நெஞ்சிலிருந்து உதிர்ந்து விழுந்ததடா ஒருமுத்து அவருடல் மேலே
முத்து முத்தாய் வியர்க்குதடா மூச்சுக்குழாய் அடைக்குதடா
அப்பா நீ மண்ணைவிட்டு பிரிந்தாலும் என் மனதை விட்டு பிரியவில்லை இந்த மகனை விட்டு பிரியாமல் என் மனதினிலே வாழ்வாயா
நீ விதைத்த விதையொன்று மரமாக வளர்ந்திருக்கு
நீ பட்ட பெரும்பாடு உரமாக விழுந்திருக்கு
வளர்ந்த மரத்தினிலே பலகிளைகள் உருவாகும்
உருவாகும் கிளையெல்லாம் உன்பேரை உச்சரிக்கும்
நாளாக நாளாக எல்லாமே மறைந்து போகும்
நீ விதைத்த விதை மட்டும் விழுதுகளாய் வளர்ந்து நிற்கும்

என்றென்றும் நினைவுடனே
இனிய மகன்.........

ஆக்கம்
தமிழ்சரண்

எழுதியவர் : தமிழ்சரண் (31-Jan-21, 7:59 pm)
சேர்த்தது : தமிழ் சரண்
பார்வை : 66

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே