வன்மம் துப்பும் துவக்கு

கண்கள் மூடியும் கதறல் காதுகள் குடையும்
கண்ணீர் குருதியாய் உடலினை மெழுகும்
கனவுகள் தோறும் நிணங்கள் மலியும்
நனவுகள் தோறும் நடக்கும் கால்களை பிணங்களிடரும்
புலரிகள் தோறும் வன்புணர்சசியின் வீச்சம்
விடியல் வெட்டம் என்றும் செங்குருதியின் மூட்டம்
வன்மம் வற்ற வற்ற வயிறு நிறைய தீனிப்போட்ட துவக்கொலி
பாறைநெஞ்சு பஞ்சாய் இளகியப்பின்னே
தீனியாய் தின்ன என்னைத் தீயாய் துரத்துதே
துவக்கொலி திகட்டியப்பின்னே
துளங்கிய தூண்டா மெய் விளக்கின் துண்டு கீற்று
துவக்கினும் ஆழத்துளைத்து தூக்கம் கிழிக்குது
எஞ்சிய கந்தல் துஞ்சத்தின் கனவுகளில் கண்ணீரும் கம்பலையுமே
திகட்டிய துவக்கொலி நிற்காது துரத்த
உள்ளம் துவள உணர்ந்தே விழுந்தேன்
தூக்கின் சுருக்கில்
உறக்கம் வேண்டும்
பசியாற பயிரென என் துவக்குகள் மேய்ந்த உயிர்களின் உறுத்தல்கள் ஊடுறா
உறக்கம் வேண்டும்

எழுதியவர் : கொற்றன் (9-Feb-21, 9:58 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 38

மேலே