கவிதை - சர்வதேபதிவு ச கவிதை தினமான இன்று எழுத்தில் என் இரண்டாயிரமாவது
சர்வதேச கவிதை தினம் இன்று
கவிதை
========
மலையினிலும் நதியினிலும் மதியதனின் ஒளியினிலும்
மறைந்திருக்கும் அழகழகாய் கவிதை
அலையினிலும் கடலினிலும் அலைமோதும் படகினிலும்
அடுக்கடுக்காய் புதைந்திருக்கும் கவிதை
சிலையினிலும் செதுக்குகின்றச் சிற்பியவன் மனத்தினிலும்
சிரித்திருக்கும் சிறப்பானக் கவிதை.
இலைகளிலும் மரங்களிலும் இயற்கைதரும் கனிகளிலும்
இனித்திருக்கும் இன்னமுதக் கவிதை
**
உலையினிலே விதைநெல்லை உணவாக்கும் உழவனுக்குள்
உதிரமெனக் கொட்டுமுயிர்க் கவிதை
தலையினிலே பூச்சூடத் தலைவனுக்குக் காத்திருக்கும்
தங்கையர்க்குத் தனிமைதுயர் கவிதை
வலையினிலே மீன்சிக்கும் வரைகாத்துப் போராடும்
வலைஞனுக்கு நடுக்கடலே கவிதை
விலையுயர்வால் பரிதவித்து விழிதுஞ்சா மக்களுக்கு
வேதனமுயர் வதுவொன்றே கவிதை
**
தந்திரமாய் ஏமாற்றும் தலைவனுக்கு எப்போதும்
தான்மட்டும் ஆள்வதுவே கவிதை
மந்திரத்தால் பேய்விரட்டும் மாந்தரீகர்க் கெப்போதும்
மூடநம்பிக் கைகள்தானே கவிதை
சிந்தனையைக் கூர்த்தீட்டிச் செந்தமிழால் பதமாகச்
செய்தவைகள் மட்டுமல்லக் கவிதை,
சந்ததமும் காணுகின்றச் சகலமான காட்சிகளில்
சஞ்சரிக்கத் தோன்றுவதும் கவிதை
****
*மெய்யன் நடராஜ்