நீட்சி

நீட்சி
======
ஆண்டுக்கோர் தேர்தல் வந்து
ஆட்சிகள் மாறி னாலும்
தூண்டுகோ லின்றி மக்கள்
துயர்படும் வாழ்வில் மாற்றம்
தீண்டவோர் வழியு மில்லை
தினசரி வறுமைத் தொல்லை
ஆண்டவன் வந்து நாட்டை
ஆண்டாலும் கடனே எல்லை.
**
சின்னதாய் இருக்கும் கடனைச்
சீக்கிரம் அடைப்ப தாக
பென்னம் பெரிதாய் கடனைப்
பெற்றுமே அடைத்து விட்டு
என்னவோ சாதனை செய்து
இமயத்தி லேறிய தாக
தன்னையே புகழும் ஆட்சித்
தன்மையே பித்த லாட்டம்
**
ஆள்பவர் சுரண்டி நாட்டை
அடுத்ததோர் நாட்டில் சேர்த்து
நீள்கிற சந்ததி யோடு
நிம்மதி யாக வாழ
தோள்கொடுக் கின்ற ஆட்சி
தொலைந்துதான் போகு மட்டும்
வாள்தனை கழுத்தில் தாங்கி
வாழ்வதே நமக்கு நீட்சி!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Apr-21, 1:15 am)
பார்வை : 73

மேலே