நாட்டுப்புறம் அழிஞ்சி போச்சி நலமான வாழ்வும் நாசமா போச்சி

நாட்டுப்புறம் பக்கம் நான்போக;
நல்ல செய்தி கேட்கவர;
நடைபிணமாய் நடந்துவிட்டேன்;
காடு கழனியெல்லாம் அழிந்து நிற்க;
அடுக்குப்பானையை தலையில் சுமந்து,
அள்ளி சொருவிய முடியுடன்,
அப்பிய சானியையுடன்,
கள்ளியவள்;
கட்ழகுடன் வருவாள் என்று நிற்க;
கண்ட உடன் கண்ணீர் பெருகிநிற்க;
கத்தாழைச் செடியும் காஞ்சிநிற்க;
கள்ளு தந்த மரமும் சாஞ்சி நிற்க;
கண்ணிரண்டும் கண்ணீர் வடித்ததடா சாமி;
முட்டிக்குமேல் தூக்கி முடிஞ்ச சேலை இடுப்புல நிற்க
முகமஞ்சள் பூசி நிற்க
அஞ்சரைப் பெண் இவள்,
ஆடிவருவாள் என்று தவிக்க
முக்காடு போட்ட நங்கை வந்தாள்;
முழுசா முழுசா தமிழ் பாசை பேசத் தெரியாமல் திணறி

பொட்டு பெரிசா வச்சி
பொல பொலன்னு வெத்தில கடிச்சி
மெட்டியோடு சுள்ளி சுமந்து வருவா,
மொட்டவிழிந்த ரவுக்கக்காரி
என்றே ஏங்கி காக்க,
எட்டுவச்சி வந்தாளடி,
எங்க ஊரு பசப்புக்காரி,
பாராம் பரியத்தை மறைந்த சொகுசுக்காரி.
கருத்த முடி கட்டழகி,
கரியயானை மேனியழகி;
ஒட்டுப்போட்ட பொட்டோடு வச்சி
ஓடிவந்தாள்,
கன்னிபொண்ணு இவள்;

என்பாடே பெரும்பாடு
ஏங்கித் தவிக்கும் பெண்பாடு,
உண்ணத்தவிக்கும்
ஊர்பாடு
என்றே ஏங்கித்தான் வந்தாளே;
எட்டுவைக்க முடியாம
வந்தாளே எங்க ஊருக்காரி;

வயசுப்புள்ளைக வளர்ப்பப்பார்த்து,
வாயடைச்சி போகையிலே,
வந்தாளே வாய்நிறைய
அங்கில் என்றே சொல்லி,
அப்பனை டாடி என்றும்,
அம்மாவை மம்மி என்றும்,
மண் வாசனையை மறந்தே
மாற்று மொழியில் அழைத்தாளே

அருவாக் கண்ணழகி;
அருவாமனை மேனியழகி;
அழகை அழித்துவிட்டு,
அள்ளியே சாயத்தைப் பூசி வந்தாளே,

வயசுப்புள்ளக்காரி
வச்ச கண் எடுக்காம பார்க்கையிலே.
வைத்துப்புள்ளக்காரி
வறுமையைத்தான்
சுமந்து வந்தாளே
வாயடைச்சி போயி நின்றேன்.

கையில கருப்புக்கயிருமில்ல,
காட்டுக்கருப்பு படாமால்இருக்க,
முகத்தில கருத்தமையும் இல்ல,
கனத்த குரலிலே,
மோட்டார் சைக்கிளை எடுத்து மோதித்தான் போனாளே;

மரத்தடி பிள்ளையார்,
மனமுடஞ்சி கிடக்கக் கண்டேன்;
மானம் காத்த பூமியின்று,
மக்கித்தான் கிடக்கக் கண்டேன்

ஒத்தமரத்தடியில,
ஒக்காரவே பயந்தவக,
ஒதுக்குப்புரத்தில்
ஒய்யாரமாக சரக்கடிக்கக் கண்டேன்.

தெருக்கூத்துல தெய்வீகம் போயி,.
தெருக்கூத்து தெருவீதியில்
தினரக் கண்டேன்,
இரட்டைப்பொருள் பாடல்கள்,
இடிக்கும் குத்தாட்டங்கள்,
நாகரீக சீர்கேடுகள் கண்டேன்.

கோடாளி மண்வெட்டி பிடிச்ச கை
இன்று கடனாளி ஆகிடிச்சி.
வேளாண்மை படுத்துடிச்சி.
வேதனைதான் சுமந்திடிச்சி,
விலைவாசி ஏறிடிச்சி,
விளைபொருளுக்கு,
வித்த முதல் கடனுக்கு
முழுகிடிச்சி,

பொங்கி வந்த காவேரி
மறஞ்சிடிச்சி,
மணல் திருட்டும் நெறம்பிடிச்சி

பொன் வெளஞ்ச பூமி,
இன்று
தரிசாக மாறிடிச்சி,
கால்வாய்கரையெல்லாம்,
காணாமல் போயிடிச்சி,
கட்டிடங்கள் நிறம்பிடிச்சி,
புளியமரத்து முனியும்,
பயந்து ஓடிடிச்சி,
ஆற்றங்கரையிலே ஆடிப்பாடிய பறவைகள் காணாமல் போச்சி,
அடிச்ச காத்தில வந்த ஈரப்பசையும்,
இப்ப காஞ்சிபோச்சி,
பொட்ட வெயிலு
பொழுது சாஞ்சும்,
சூடுகாத்து சுத்திவருது.

பனைமரத்திற்கும் மொட்டை அடிச்சாச்சி,
நிர்வாணமாய் நின்னு போச்சி,

தண்ணி மிதந்த கழனி இது;
இன்று
தண்ணீர் இல்லாமல்,
பூமி எல்லாம்
தாரு மாற வெடிச்சி போச்சி.

கஞ்சிக்கு செத்த நாயப்போல,
கிராமத்து மக்களும்,
வஞ்சிக்கப்பட்டு நாளாச்சி.

மண்ணும் மலடாச்சி,
மனசும் மடிஞ்சி போச்சி,
கிராமத்து அடையாளங்களும் தொலஞ்சி போச்சி,

வண்டிப்பாதை மடிஞ்சிபோச்சி,
வயக்காடு மாறிபோச்சி,
மாட்டுத்தொழுவம்,
மறைந்து போச்சி.

அடிக்கிற வெயிலில,
குளமும் வத்தி போயிடிச்சி,
சாதிச் சண்டை நிறம்பி போச்சி,
சல்லித்தனமும் பெருகிபோச்சி.
நொச்சரிசியில வச்ச கஞ்சிச்சோறும் காணாமல் போச்சி,
கழனித்தண்ணீ குடிச்ச மாடும் காணாமல் போச்சி,

நெல்லுப்பூ எள்ளுப்பூ பூத்த கழனியில,
எருக்கம்பூ பூத்து போச்சி.

கூரைவீட்டு சந்தோசம்,
கூண்டோடு அழிந்து வேம்பாச்சி,
தெரு வீதி மாறிடிச்சி,
தொல்லைகள் பல வந்திடிச்சி,
எல்லாம் மாறிடிச்சி,

குத்துவிழக்கு பூசை,
பூச்சொரிதல்,
மஞ்சல் குடம் அம்மன் குளியல்,
முளப்பாரி,
அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல்,
கடா வெட்டி,
ஆய்யனார் படையல்,
எத்தனை விழாக்கள்,
ஏல்லாம் எங்கள் கிராமத்து தெய்வீக விழா எடுப்பாகும்
எல்லாம் காணாபோச்சி.

குத்துச்சண்டை,
மஞ்சு விரட்டுதல்,
வீரவிளையாட்டு,
சடுகுடு பச்சைக்குதிரை,
கிட்டிபுல், சிலம்பு, வழுக்குமரம், ஆடு புலி
உறியடி,
டிக் டிக் குரும்பை குச்சி விளையாட்டு எல்லாம் மறைந்து,
கையில் பிடிச்ச கைபேசியில் விளையாடி
வீனாகுது இளமை.

குடிபோதையில் குடும்பம் சீரழிய.
இயற்க்கையோடு இணைந்த கிராமம்.
இருட்டித்தான் போனதம்மா.

ஓலைக்குடுச அடுக்குப்பானை
ஓட்ட உடைசல்
தொழுவத்து வாடை
நீச்ச தண்ணி
நீல வானத்தில் பூத்த ஒளியில் நிலாச்சோறு
மனதைத் தைத்த குளத்தங்கரை குளியல்
புற்கள் சுமந்த பனிகள்,
புறாக்களின் ஆட்டம்,
பச்சை பசும்சோலை,
கதிர் சாய்ந்த வயக்காடு
கால்வாய் குளம் குட்டை,
ஒத்தையடிப்பாதை,
மாட்டிப்வண்டிப் பயணம்,
புன்னை மரத்து நிழல்கள்,
தென்னை கொடுத்த இளநீரு,
தென்றல் தீண்டிய உயிரு,
தேடிவந்த மரியாதை
தெரு ஓரத்தில் நாய்கள் சண்டை,
நடு வீட்டில் பாட்டியின் நையாண்டி,
பாரா முகமாய்,
ஓரவிழியில் பார்க்கும்,
அத்தைப்பெண்ணின்
காதல் மொழிகள்,
அம்மா சுட்ட பலகாரமும் முறுக்கும்,,
அய்யாவின் அதட்டல் வார்த்தை,,
அண்ணன் மார்களின் அடிபிடி சண்டை
ஆடுகளின் ஓசை,
ஆடியே வந்த அத்தைமார்களின் வசையோசை,

அழுக்கு சுமந்துவந்த,
ஆண்டையின் ஆட்டம்,
ஆறத்தழுவிட ஆசையுடன் பாசம்,
பொட்டுவச்ச முகம்
அள்ளித்தின்ற குழந்தைகளின் ஓட்டம்,
அரைகால் டவுசரில் கிழிந்த ஓட்டை,
பொன்வண்டு பிடித்து பாட்டிலில் போட்டு விளையாடிய காலம்,
நவாப்பழம் பொறுக்கிய காலம்,
திருட்டு மாங்க எடுத்து நின்ற நாட்கள்,
தாலாட்டு மறஞ்சி போச்சி
தாய்வீட்டு பாசமும் புளிச்சிப்போச்சி
மாம மச்சான் உறவும் மாறிப்போச்சு
விவசாயம் விழுந்துபோச்சி
வெத்துப்பேச்சி நிரம்பிப்போச்சி
தடாகத்து தென்றல் தாண்டிப்போச்சி
அழகான சைக்கிள் சவாரியில் குரங்கு பிடல்,
எல்லாம் மறைந்து,
கிராமத்து அத்தியாயம்,
காணாமல் போனதம்மா.
நாட்புப்புறம் நசுங்கி போச்சி
நாட்டுப்புற கலைகளும் அழிஞ்சி போச்சி
நாகரிகப் போர்வையை பொத்தி நாளாச்சி
நலமான வாழ்வும் நாசமா போச்சி

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (19-Jun-21, 11:39 pm)
பார்வை : 36

மேலே