கனவுகள்

ஆழ்மனதின் நினைவலைகளில் சிக்கி
தத்தளித்து தப்பிக்க முயலும் படகுகள்
அந்தரங்க எண்ணங்கள் அடங்காத கோபங்கள்
அடைய முடியா ஆசைகள் பெயரில்லா உணர்வுகள்
அத்தனையும் விடாமுயற்சி செய்தன
கரை சேர இன்னும் எத்தனை மணிநேரம்?
தூக்கத்தின் மடியிலே நீ அமர்ந்தால் தான்
நாங்கள் கரை செல்ல இயலும்
கணினியை அணைத்து விட்டு
கைபேசியை அகற்றி விடு
இரவின் மெல்லிய சத்தம்
மனதை தாலாட்ட விடு
மூச்சிழந்து சிந்தனைகள்
மடிந்து போகும் முன்னமே
நித்திரையை வரவழைத்து
மனதிலே விருந்து வை

நினைவுகள் மரித்தால் தான்
கனவுகள் வாழ முடியும்
கனவுகள் வாழ்ந்தால் தானே
கற்பனைகள் பவனி வரும்?
கற்பனைகள் வாழ்ந்து விட்டால்
கலைஞனுக்கோ மோட்சம் தான்.

எழுதியவர் : (26-Jun-21, 2:41 pm)
சேர்த்தது : சந்தியா
Tanglish : kanavugal
பார்வை : 52

மேலே