மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே - வெண்டளை பயிலும் கலி விருத்தம்

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே 2

ஏழாம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

பொழிப்புரை:

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக

குறிப்புரை:

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம்; பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார்; ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகுவோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது.

பின்னர், மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன் என்றமையால், முன்னர், `செய்தான்` என்றதும் அவனையே யாயிற்று; `நல்லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து.

மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது;

இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-21, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே