விழிகள் பேசும் மொழிகள்
பிள்ளைகளின் பார்வையிலே பெற்றவள் காண்பதும்,
பெண்மையின் பார்வையில் ஆண்மகன் உணர்வதும்,
தந்தையின் பார்வையில் தனயன் அறிவதும்,
சிந்தையில் புகட்டுமே ஆயிரம் வார்த்தைகள்!
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள்
விழிகளின் மொழியிலே வெள்ளிடை ஆகிடும்!
உடல்மொழிக் கூற்றுடன் நேத்திரம் இணைந்திடின்
பொதுமொழி பிறக்குதே விழிகளின் கூடலில்!
எளியவன் பார்வையில் வலியவன் இராஜாங்கம்
இறைவனின் பார்வையே ஏழைக்கு அரசாங்கம்!
கூற்றுவன் பார்வையில் துளியில்லை ஒருபேதம்
வார்த்தையின் மரித்தலில் விழிபேசும் பலநாதம்!
கடைக்கண் பார்வையிலே காதலும் மொழிபேசும்
அரைக்கண் பார்வையிலே ஆடலும் அரங்கேறும்!
அரண்டவன் கண்களிலே காண்பதும் பொய்யாகும்
விழிபேசும் மொழிகளிலே மௌனமும் உரையாடும்!