விதியை விதிக்கும் வினையை விரியாது அடக்கின் கதிக்கு வழியாகும் - விதி, தருமதீபிகை 900
நேரிசை வெண்பா
விதியை விலக்க விதியாலும் ஆகா;
மதியால்பின் என்னாம் மதித்து - விதியை
விதிக்கும் வினையை விரியா(து) அடக்கின்
கதிக்கு வழியாகும் காண் 900
- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நேர்ந்த விதியை விலக்கத் தேர்ந்த விதியாலும் முடியாது; ஆகவே மதியால் மதித்து என்னாகும்? விதியை விளைக்கின்ற வினையை விரிக்காமல் நீ அடக்கினால் அது கதியை நேரே காட்டி யருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்; இந்த மருமத்தை அறிந்தால் மகிமை பெருகி வரும். விதியும் மதியும் கதியும் இங்கே காண வந்துள்ளன.
மதியால் மனிதர் மாண்புற்று வருகின்றனர்; வரினும் இந்த மதி அந்த விதியின் வழியே வேலை செய்து வருகிறது. மூண்ட விதி நீண்ட வலிமையுடையது; யாண்டும் ஆண்டவனாகவே அதிசய நிலையில் அது அமைந்துள்ளது. அது காட்டி ஊட்டியபடியே யாவும் கண்டு உண்டு களித்து வருகின்றன.
பிரம்மாவுக்கு விதி என்று ஒரு பெயர்; எல்லா வுயிர்களையும் முறையே படைப்பவன் என்பது அதன் பொருள். யாவும் விதிக்கின்ற அந்தச் சிருட்டி கருத்தாவும் விதியை விலக்க முடியாது. ஆகவே விதியின் வலிமையும் அதன் நிலைமையும் எவ்வளவு அதிசயமான தலைமையில் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம். மூண்ட விதி வழியே முடிவுகள் நீண்டு வருகின்றன.
விதி பெரிதா? மதி பெரிதா?
இப்படி ஒரு கேள்வி பண்டு தொட்டே ஒரு முதுமொழியாய் மூண்டு வந்துள்ளது. விதிக்கும் மதிக்கும் நெருங்கிய ஓர் உறவு நிலைத்திருப்பதை இது உணர்த்தி நிற்கிறது.
மனத்திலிருந்து கிளைத்து எழுகின்ற நினைவின் வழியே வினை விளைந்து வருகிறது. வினைக்கு மூலமான அந்த நினைப்பை நல்லதாகச் செய்ய வல்லது மதியே; அவ்வாறு செய்திருந்தால் அது நல்வினையாய் இன்பமே தரும்; அங்ஙனம் செய்யாதுவிடின் அது தீவினையாம்; அல்லலை விளைக்கின்ற அது பொல்லாத விதியாய்ப் பொங்கி வருங்கால் எந்த மதியும் அதை யாதும் எதிர்க்க முடியாது. விதி மூண்டுவரின் மதி மாண்டு போகும் என்னும் முதுமொழி விதியின் அதிசய நிலையை நன்கு விளக்கியுள்ளது.
நேரிசை வெண்பா
விதியினால் வாழ்வதல்லால் மேதினியோர் தங்கள்
மதியினால் வாழ்வதொன்(று) உண்டோ - பதிதோறும்
சங்கரனும் ஐயமெடுத்(து) உண்டான்; தடங்கடல்சூழ்
மங்கையுடன் காடுறைந்தான் மால்
தேவதேவரும் விதியை விலக்க முடியாது என்பதை விளக்குதற்குச் சிவபெருமானையும், திருமாலையும் இது எடுத்துக் காட்டியுள்ளது அயன் தலையைக் கிள்ளியதால் சிவன் பலி எடுக்க நேர்ந்தான்; மாலும் மாலால் மறுகியுழன்றான்.
விருந்தை என்பவள் சலந்திரன் மனைவி; அதிசய அழகி; அவள் மேல் மால் மையல் கொண்டான்; வஞ்சம் புரிந்து அவ்வஞ்சியை மருவினான்; அவள் நெஞ்சம் தெளிந்து சினந்து சபித்தாள். அக்கற்பரசி கடுத்து வைததை அயலே காண்க.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
சொல்படு பழியினைச் சுமத்தி யாலென்றாள்.. 291
- ததிசி உத்தரப் படலம், தக்ஷ காண்டம், கந்த புராணம்
அந்தப் பத்தினியிட்ட சாபம் மாயனை மருவி நின்று விதியாய் நீண்டு பின்பு இராமனை வேதனை செய்ய மூண்டது. பருவத முனிவர் சாபமும் அதனோடு கூட நேர்ந்தது. தன்னை இன்னான் என்றறியாமல் மயங்கி மாயன் இன்னலுழந்து திரிவான் என்பது இராமாவதாரத்தில் முடிவாய் நின்றது.
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
கன்னி யந்துழாய்க் கமலலோ சனன்தய ரதற்கு
மன்னு நன்மகன் ஆகியே வந்தனன் உதித்து
முன்னை அந்தகா ரத்தினால் மூடிடப் பட்டுத்
தன்னை மாயனென்(று) அறிந்திடா(து) உறைந்தனன் சார்ந்தே. 85
- இலிங்க புராணம், உத்தர, அம்பரி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று. (மணிமேகலை, 17)
விதியின் தந்தை விதிவசமாய் வந்துள்ளமையை இவற்றால் உணர்ந்து கொள்ளுகிறோம். ஊழின் சூழ்வு ஓர்ந்து சிந்திக்க வந்தது.
அரசுரிமையை இழந்து இராமன் காட்டுக்குப் போக நேர்ந்த போது இலக்குவன் வெகுண்டு மூண்டு வில்லோடு விரைந்து வந்து 'அரசர் பெரும! இந்த முடிசூட்டு விழாவுக்கு இடையூறு செய்தவரை அடியோடு அழித்து நான் உங்களுக்கு மணிமுடி சூட்டுவேன்” என்று வீராவேசமாய்க் கூறினான். அப்பொழுது அந்த அருமைத் தம்பியை நோக்கி இக் குலமகன் சொன்னது உலக வுள்ளங்களை உருகச் செய்தது. விதி நிலையை விளக்கி மதி நலத்தோடு மொழிந்த அதனை அயலே காண வருகிறோம்.
கலித்துறை
(மா விளம் விளம் மா மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழையன்று; பயந்துந மைப்பு ரந்தாள்
மதியின் பிழையன்று; மகன்பிழை யன்று; மைந்த!
விதியின் பிழை;நீஇ தற்கென்னை வெகுண்ட(து)?’ என்றான். 130
- நகர்நீங்கு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
அரசாளும் விதி இப்பொழுது எனக்கு இல்லை; காட்டுக்குப் போகவே என் தலையெழுத்து உள்ளது; பிறர் எவர் மீதும் பிழை கூறலாகாது; அமைதியாயிரு என்று தன் தம்பியை இந்நம்பி அடக்கியிருக்கிறான். இந்த அருமைப் பாசுரத்தின் பொருளையும் சுவையையும் துணுகி உணர்ந்து இனிது நுகர வேண்டும். பெரியவன் வாய்மொழி அரிய ஒளிகளை வீசியுளது.
எவரையும் விதி விடாது; எவ்வளவு மதியுடையராயினும் விதியை வெல்லமுடியாது. விதி வழியே மதி என்பது பழமொழி. அந்த மூதுரையின் படியே யாவரும் வாழ நேர்ந்துள்ளனர்.
கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்)
முதிர்தரு தவம்உடை முனிவர் ஆயினும்
பொதுஅறு திருவொடு பொலிவர் ஆயினும்
மதியினர் ஆயினும் வலியர் ஆயினும்
விதியினை யாவரே வெல்லும் நீர்மையார். 214
- மார்க்கண்டேயப் படலம், அசுர காண்டம், கந்தபுராணம்
விதியினை வெல்ல வல்லவர் யாரும் இல்லை; அது வகுத்தபடிதான் எவரும் வாழமுடியும் என இது வரைந்து காட்டியுளது.
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
துதிஅறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதிவயம் என்பதை மேற்கொ ளாவிடின்,
மதிவலி யால்விதி வெல்ல வல்லமோ? 193
தெரிவுறு துன்பம்வந் தூன்ற, சிந்தையை
எரிவுசெய்(து) ஒழியுமீ(து) இழுதை நீரதால்;
பிரிவுசெய்(து) உலகெலாம் பெறுவிப் பான்தலை
அரிவுசெய் விதியினார்க்(கு) அரிதுண் டாகுமோ? 194
அலக்கணும் இன்பமும் அணுகும் நாளவை
விலக்குவம் என்பது மெய்யிற்(று) ஆகுமோ?
இலக்குமுப் புரங்களை எய்த வில்லியார்,
தலைக்கலத்(து), இரந்தது தவத்தின் பாலதோ? 195
பொங்குவெங் கோளரா, விசும்பு பூத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்;
அம்கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய்கதிர்த்
திங்களும், ஒருமுறை வளரும் தேயுமால். 196
- சடாயு உயிர் நீத்த படலம், ஆரணிய காண்டம், இராமாயணம்
இந்தப் பாசுரங்கள் இங்கே ஓர்ந்து சிந்தனை செய்யவுரியன. சீதையைப் பிரிந்து நோதலுழந்து வந்த இராமனுக்குச் சடாயு இவ்வாறு விதியின் அதிசய நிலைகளைக் குறித்துப் போதித்திருக்கிறார், அதிமேதையான அவ்வீரன் மதி தெளிந்து ஆறுதலுறும்படி விதியின் விளைவுகளை விளக்கி முதியவன் பேசியிருப்பதில் ஞான ஒளிகள் வீசி நிற்கின்றன.
படைப்புக் கடவுளான பிரமாவைத் தலை இழக்கச் செய்தது; அழிப்புக் கடவுளான சிவபிரானைப் பிச்சை எடுக்கப் பண்ணியது; தேவராசனான இந்திரனை இழிந்து திரியப் புரிந்தது; ஒளிப் பிழம்புகளான சூரிய சந்திரர்களை இருண்டு மருண்டு இளிவுற இயற்றியது; அத்தகைய அதிசய ஆற்றலுடைய விதி எதிரே யார் என்ன செய்ய முடியும்? அது ஆட்டியபடியே யாவும் ஆடி முடிகின்றன. மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? என்று அந்த முதியவன் உள்ளம் உருகி இப்படிச் சொல்லியிருக்கிறான். இராமனேடு தன்னையும் உளப்படுத்தித் தன்மைப் பன்மையில் கூறியிருப்பதைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். தன் அருமைப் பிள்ளையை ஒரு முதுமைப் பிதா உழுவலன்போடு தழுவி மறுகி மொழியும் பரிவுக் காட்சியை அறிவுக் கண்ணால் கண்டு நிலைமைகளை எண்ணி இங்கே நாம் கண்ணீர் மல்கி உருகி நிற்கின்றோம்.
மகாவீரனும் அதிசய மேதையும் ஆகிய இராமன் தனது இனிய மனைவியை இழந்து கொடிய துயரோடு மறுகி வந்துள்ளான்; இராவணனது வாளால் வெட்டுண்டு சிறகு இழந்து சடாயு சாக நேர்ந்திருக்கிறான், இந்த நிலையில் சிந்தை நொந்து அந்த மைந்தனுக்குத் தேறுதல் கூறுகின்றான். ஆதலால் விதியின் வலிமையைத் தெளிவாய் விளக்கி விவேகமாய் ஆறுதல் அருளினான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
கதிதரும் அயனும் மாலும் கடக்கருங் கொடிய நீர்மை
விதியினை எளிய நம்மால் வெல்லலாம் தகைமைத் துண்டோ
அதிகம்வந் தெய்தா மேனா ளமைத்தவே யடுக்கு மல்லால்
மதிவலோய்! இதற்கு வாடி வருந்தலை என்று சொன்னான். 68. காசி காண்டம், அரிச்சந்திர புராணம்
புதியவான் அமுதம் ஈந்து புலவரை வளர்ப்பான் மேனி
திதிதொறும் தேய்வ தானான்; சிறுவிதி சாபம் தீரான்;
நதிபொதி பவள வேணி நாதனார் அடியார் அன்றி
விதிதனை மதியி னாலே வெல்லவும் வல்லார் உண்டோ?
- (திருக்குற்றால, தக்கன், 31)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
சந்திரனுக்(கு) உடல்ஊனம்; தனதனுக்கோர் கண்ஊனம்;
..தருவி னீழல்
இந்திரற்கோ பகக்குறியாம்; இமயனுக்கோ புழுக்காலாம்;
..இரவி யீன்ற
மைந்தனுக்கோ கால்முடமாம்; வனசனுக்கோர் தலைகுறையாம்;
..வரலா றீதேல்
பந்தமுள மானிடரை விதிவிடுமோ ஆலவாய்ப்
..பதியு ளானே. - சொக்கநாதர்
விதியின் அதிசய வலிகளை இவை விளக்கியுள்ளன.
விதியால் தனக்கு நேர்ந்தள்ள சாவை முன்னதாக அறிந்து பரிட்சித்து மன்னன் அதனை விலக்க முயன்று, மிகவும் எச்சரிக்கையாயிருந்தான்; இருந்தும் குறித்த நேரத்தில் இறந்தே போனான். எவ்வழியும் விதி எவரையும் வென்று போகின்றது.
நேரிசை வெண்பா
முன்னறிந்து முன்சூழ்ந்து மூண்டுதனைக் காத்திருந்தும்
மன்னன் பரிட்சித்து மாண்டொழிந்தான் - என்னவகை
செய்தாலும் முன்செய்த தீவினையைத் துய்க்காமல்
உய்வார் எவர்காண் ஒளிந்து.
தன்பயனை ஊழ் ஊட்டாமல் ஒழியாது என்பதை இது தெளிவாக் காட்டியிருக்கிறது. தன்னைச் செய்த கிழவனைப் பழவினை விடாமல் பற்றிக் கொள்ளுகிறது; ஆகவே அது தெய்வம் என நின்றது. அது செய்தபடியே யாவும் எய்த வருகின்றன.
நல்வினை சுகத்தையும், தீவினை துயரையும் இறையும் தவறாமல் முறையே தருதலால் விதி நெறியே முறை என வந்தது.
ஊழ்வினை முன்னமே முடிவாய் மூண்டது; யாரும் அதனை நீக்க முடியாது; யாண்டும் தன் பலனை அது தந்தே விடுகிறது. அது அளந்து படிபோட்டபடியே எவரும் சுக துக்கங்களை நுகர்ந்து உலக வாழ்வில் உழந்து வருகின்றனர்.
A little sorrow, a little pleasure,
Fate metes us from the dusty measure
That holds the date of all of us. - Swinburne
எல்லாருடைய வாழ்நாளும் விதியின் கையில் உள்ளது; அது முகந்து அளந்த அளவின்படியே சுகமும் துக்கமும் தொடர்ந்து வருகின்றன என்னுமிது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. விதி காட்டியதையே யாரும் காணுகின்றனர்.
பகுத்தறிவுடைய எவரும் விதியின் வலியை வகுத்தறிந்து மதித்து வருகின்றனர். பொல்லாத விதி நேரே பொங்கி எழுந்தபொழுது நல்ல மதியும் மங்கி மறைந்து போகிறது.
நேரிசை வெண்பா
மாதண்டை வந்துநின்ற மாரீ சனைமறந்து
கோதண்ட வீரன் குடிபோனான் - தீதண்ட
மேதையே ஆனாலும் வெய்ய விதிவிளையின்
பேதையே ஆவன் பிறழ்ந்து.
மகா மேதையான இராமனும் மாயமானைக் கண்டு மதி மயங்கினான். அது வஞ்சம் உடையது; இராட்சச மாயையால் நேர்ந்தது என்று தம்பி தடுத்தும் கேளாமல் நம்பி அதன்பின்னே போனான்; அதனால் தனது அருமை மனைவியை இழந்து அல்லல் பல உழந்தான். விதியை மதியால் வெல்ல முடியாது வன்பதை இந்த அதிபதி நிலை நன்கு தெளிவாக்கி நின்றது.
There is no armour against fate. (Shirley)
விதியைத் தடுக்கவல்ல கருவி யாண்டும் இல்லையென்னும் இந்த ஆங்கில வாசகம் ஊன்றியுணர்ந்து கொள்ள வுரியது.
தீயவினைகளைச் செய்யாதே; செய்தால் அவை தீயவிதியாய் மூண்டு யாண்டும் ஓயாதுன்னை வதைக்கும்; நல்லதையே நாடிச் செய்; அது எங்கும் உனக்கு இன்பமே அருளி இசை புரிந்துவரும். இந்த உண்மையை உணர்ந்து உயர்நிலை யுறுக.