நண்பன் அருள்தாஸ்
நண்பன் அருள்தாஸ்...
அடர்த்தியான அன்புக்குச்
சொந்தக்காரன் இவன்...
அருமையான ஆளுமைக்குப்
பந்தக்காரன் இவன்...
வரலாற்றுத் தேடல்களில்
எல்லைகள் தாண்ட
விருப்பம் இவனுக்கு அதிகம்...
புவியியலில் இவன் படித்ததை விட
பார்த்தது மிக அதிகம்...
உப்புக்காற்று உடலின்
அகம் புறம் பட்டு வளர்ந்திருந்தாலும்
இவனது உள்ளம் இனிமையானது...
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேச இவனுக்குத் தெரியாது...
மொழிகள் கற்றுக் கொள்வதில்
மகாகவி பாரதி வழி.....
தமிழின் வேர்களை
விசாரித்துக் கொள்வதில்
தேவநேயப் பாவாணர் வழி...
எனவே இவன் சொல்வான்
தமிழ் மிக மிக இனிய மொழி...
ஒரே திசையில் வீசும் காற்றில்தான்
பல திசைகளில் பயணிக்கின்றன
பாய்மரங்கள்... இவனுக்கு
எண்ணங்கள் நேரான காற்றின் வழி..
நட்பில் சீரான பாய்மரங்களின் வழி...
கூப்பிடும் தூரத்தில் இருக்கும்
கடல் போலவே இவனது
சிந்தனைக் கடலின்
நீள அகல உயரமும் அதிகம்...
மீன்கள் நாவிற்கு சுவைக்கும்
நன்கு சமைத்த பிறகு...
கருத்துக்கள் மனதிற்கு சுவைக்கும்
நன்கு புரிந்த பிறகு...
காட்டாறுகள் போட்ட வழிகளில்தான்
அமைதியான நதிகளும் ஓடும்...
வாக்குவாதங்களின் தீர்க்கத்திலும்
இருக்கும் ஒரு வசீகரம்...
கடலில் திமிங்கலங்கள் விழுங்கும்
கடல் மீன்களை... வாழ்வில்
நட்பெனும் மீன்கள் விழுங்கும்
சோகத் திமிங்கலங்களை...
வலைகள் வீசாமல் மீன்கள் கிடைக்காது...
துடுப்புகள் போடாமல் படகுகள் ஓடாது...
நட்பில்லாமல் வாழ்வு இனிக்காது...
அலைகள் என்றும் ஓயாது..
நட்பு என்றும் தேயாது.. உன்னை
வாழ்த்தி மகிழ்வது நிற்காது...
பரந்து விரிந்த வானமும் கடலும்
கதிரவனின் கைங்கரியத்தில்
கண்கள் நிறைய வண்ணமயம்...
பார்த்து வளர்ந்ததில்
மனதின் விசாலத்தில்
வாழ்வில் என்றும் வசந்தமயம்...
அருள்தாஸ் அந்தோணி...
மகிழ்வாய் வாழ்வாய் நீ...
கடலாய்... கடல் மீன்களாய்
வற்றாத வளங்களோடு
வாழ்க பல்லாண்டு...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
👍👏🌹💐🙏😃🍫🎂