புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா - இன்னா நாற்பது 12
இன்னிசை வெண்பா
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையில்லாள் பெண்மை விழைவு. 12
- இன்னா நாற்பது
பொருளுரை:
தலை அறுபடும்படி மிருகங்கள் நிறைந்த காட்டின் உள்ளே செல்வது துன்பமாகும்.
வலையைச் சுமந்து, அதனால் உண்டு வாழ்பவனது செருக்கு துன்பமாகும்.
புலால் உண்ணுதலை விரும்பி வாழ்வது மக்கள் உயிர்க்கு துன்பமாகும்.
முலையில்லாதவள் பெண்தன்மையை விரும்புவது துன்பமாகும்.
விளக்கம்:
வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின் மேல் சொல்லப்படுகின்றது.
புலை புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்று உண்ணல் சிறுமையாகலின்
அது புலை எனப்படும்.