எஸ்பிபி SPB

வானொலியில்
நீ
தேனொலியாய்
ஒலித்த காலத்தில்
"மடை திறந்து தாவும் நதி அலையாய்",
இல்லங்களில் பாய்நது,
"பனி விழும் மலர் வனத்திற்கு"
அழைத்துச்சென்று,
"அந்தி மழை பொழிகிறது" என்றே
உன் குரலில் நனையவைத்தாய்!

காணொலி தொடங்கிய
தொலைக்காட்சி காலத்தில்
"ரம் பம் பம் ஆரம்பம்" என
ஆரம்பித்து,
உன் குரல் இல்லாது
"வெள்ளிக்கிழமை
ஒளியும் ஒலியும்"
ஒலித்திருக்குமா?

இணையம் உலகை
இணைக்கத் தொடங்கிய
காலத்தில்
சில புதிய பாடல்களில்
உனைக்காணவில்லையே
என்ற போது
" எனைக்காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப்பார்க்கிறேன் காற்றோடு"
என்று பாடி
உன் இருப்பைச்சொன்னாய்.

அண்ணாத்த ஆடுறார்
என்று கமலை
ஆடவைத்து
ரஜினியின் "அண்ணாத்த"
படப்பாடலே
உன் கடைசிப்பாடலாய்
நீ ஓய்ந்தாலும்,
"ஆயிரம் நிலவே வா"
தொடங்கி
"மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா"
என்றே
நாற்பதாயிரம் பாடல்கள்
மீண்டும் மீண்டும்
உன் குரலை மீட்டு
ஒயாது
ஒலித்துக்கொண்டிருக்கும்!

எழுதியவர் : வெங்கடேஷ் PG (3-Jan-22, 6:59 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 69

மேலே